பணம் பண்ண பிளான் பி தொடர் 25 வாரங்களை கடந்து தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. பணத்தை வைத்திருப்பவர்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு பெருக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் குறைந்த பணம் அல்லது நடுத்தர சம்பளத்தில் இருப்பவர்களுக்கு உள்ள வாய்ப்புகளை அவர்களுக்கான வழிமுறைகளை பற்றியும் மட்டுமே எழுத வேண்டும் என முடிவெடுத்தோம்.
பணத்தை பெருக்குவது ஒரு வழி, அனாவசிய செலவை குறைப்பது ஒரு வழி. இரண்டுமே நாம் விவாதித்திருக்கிறோம். ஒரு ரூபாய் சேமித்தால் ஒரு ரூபாய் சம்பாதித்தற்கு சமம் என்று சொல்லுவார்கள். நடுத்தர மக்கள் எங்கெல்லாம் அனாவசிய செலவு (வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ்) செய்கிறார்கள் என்பது குறித்தும் விவாதித்திருக்கிறோம். எனக்கு ஏன் காப்பீடு அது அனாவசிய செலவு என கருதும் மனநிலை இருக்கிறது. அது குறித்தும் விவாதித்தோம். மேலும் வீடு, தங்கம், பணவீக்கம், மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை, பிக்ஸட் டெபாசிட் போன்ற நிரந்தர வருமானம் தரும் திட்டங்கள், கடன், வரி சேமிப்பு உள்ளிட்ட பலவற்றை குறித்தும் நாம் பேசி இருக்கிறோம்.
பேசப்பட வேண்டிய மேலும் சில டாபிக்கள் இருக்கின்றன. ஆனால் அவை நடுத்தர மக்களுக்கானது அல்ல. பிஎம்எஸ் (portfolio management services) திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் ரூ50 லட்சம் தேவைப்படும். அதேபோல ஏஐஎப் (alternative investment funds) உள்ளிட்ட முதலீடு திட்டங்களும் இருக்கின்றன். மியூச்சுவல் பண்ட்களில் திமேட்டிங் பண்ட்கள் மற்றும் வெள்நாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பண்ட்கள் குறித்து நாம் பேசவில்லை. காரணம் இந்த முதலீட்டு திட்டங்கள் அனுபவம் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே ஏற்றது.
ரியல் எஸ்டேட் என நாம் கருதுவது வீடு மட்டுமே. ஆனால் வீட்டை தாண்டி ரியல் எஸ்டேட்டில் பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. ஆர்.இ.ஐ.டி. (real estate investment trust), வர்த்தக கட்டடங்கள், வேர் ஹவுசிங் வாய்ப்புகள் என உங்களிடம் பணம் இருந்தால் ரியல் எஸ்டேட் பிரிவில் தற்போது பல வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அல்லது தபால் நிலையங்களை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் தற்போது பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன்.
எந்த ஒரு முதலீடு செய்யும் முன்பும் இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு முதலீடு செய்யவும்.
* எவ்வளவு முதலீடு செய்கிறோம்.
* எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்
* எந்த நோக்கத்துகாக முதலீடு செய்கிறோம்
* எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும்
இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் உங்களுக்கு எந்த திட்டம் சரியானது மற்றும் தேவையானது என்பது தெரிந்துவிடும். முதலீட்டின் ஆரம்ப நிலையில் இருந்து அடுத்தகட்டத்துக்கு செல்ல வாழ்த்துகள்.
மகளிர்களுக்காக
கார்ப்பரேட் நிறுவனங்களில் நிதி சார்ந்த விழிப்பு உணர்வினை உருவாக்கும் பணிகளிலும் நாங்கள் இருக்கிறோம். ஆரம்பகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இணைந்தே வகுப்புகள் எடுத்துவந்தோம். ஆனால் பெண்களிடம் இருந்து எந்தவிதமான சந்தேகங்களோ அல்லது கேள்விகளோ அதிகம் இருக்காது. அதன் பிறகு அங்கிருக்கும் மனிதவள பிரிவு அதிகாரிகளிடம் பேசும்போதுதான் எங்களுக்கு சில விஷயம் புரிந்தது. கணிசமான பெண்கள் நிதிசார்ந்த விஷயங்களை சார்ந்தே இருக்கிறார்கள். அது கணவன், அப்பா, சகோதரர், மகன் என யாரையாவது சார்ந்தே இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிந்தது. இது சிறு நிறுவனங்களில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலும் எங்களால் (கணிசமான பெண்கள்) பார்க்க முடிந்தது.
இதன் பிறகு பெண்களுக்கு என பிரத்யேக வகுப்பு எடுத்தோம். அப்போதுதான் வேறு ஒரு விஷயம் புரிந்தது. தங்கத்தை தவிர இதர முதலீட்டு திட்டங்களை பெண்கள் தங்களுக்கானது என கருதவே இல்லை. முதலீட்டில் தங்கம் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த முதலீடும் தங்கமாக இருப்பதில் எந்த பயனும் இல்லை. அதைவிட தங்கத்தை நகையாக வாங்கும்போது அதில் கணிசமான தொகையை இழக்கிறோம். வாங்கும்போது செய்கூலி, சேதாரம், அதனை மாறும்போதும் செய்கூலி சேதாரம் என நகைகளில் இழக்கும் தொகை மிக அதிகம்.
தேவைக்கு நகை வாங்கலாம். ஆனால் நகை வாங்குவதை மட்டுமே இலக்காக கொண்டு சேமிக்க வேண்டாம். தங்கம் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால் தங்கத்தை தாண்டிய பல வாய்ப்புகள் சந்தையில் இருக்கின்றன. நிதிசார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பதுதான் பெண்கள் செய்யும் தவறுகளில் முக்கியமானது. நிதியை சார்ந்து கவனிக்க தொடங்கினால் தங்கத்தை தாண்டி இருக்கும் அனைத்து வாய்ப்புகளும் தெரியவரும்.
வாழ்த்துகள்.
நன்றி.