தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதுதான் அதிரடி தள்ளுபடி.... விலைக்குறைப்பு என்றெல்லாம் அறிவிப்பார்கள். ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இப்போதே அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளனர் சில்லறை விற்பனையாளர்கள். அதற்குக் காரணம் ஜிஎஸ்டிதான்.
ஜூலை ஒன்று முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. அப்படி வரும்போது எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தற்போதைய 23 சதவீத வரி 28 சதவீதமாக உயரும். இதனால் டிவி, வாஷிங் மெஷின், ஏசி, ரெப்ரிஜிரேட்டர் போன்ற பொருட்களின் விலை மூன்றிலிருந்து ஐந்து சதவீதமாக உயர வாய்ப்பிருக்கிறது.
ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது, கூடும் வரி காரணமாக மே மாதத்திற்கு முன்பு கொள்முதல் செய்த பொருட்களுக்கு 6 சதவீதமும் ஒரு வருடத்திற்கு முன்பு கொள்முதல் செய்து இப்போது வரையில் விற்பனை ஆகாமல் இருக்கும் பொருட்களுக்கு 14 சதவீதம் வரையிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஜிஎஸ்டி வருவதற்குள் தங்களிடம் உள்ள பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய சில்லறை விற்பனையாளர்கள் இந்தச் சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்கள் 40 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளனர்.