ஜி.எஸ்.டி வருகைக்கு பிறகு கார்களின் விற்பனை விலை நுகர்வோருக்கு அதிகரித்துள்ளதால், பயன்படுத்தப்பட்ட கார்களின் (Used Car) வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை, சமீபத்திய சில புள்ளிவிவரங்கள் நமக்கு காட்டுகின்றது. மேலும் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு கடன் தர ஆர்வமாக முன் வருவதால் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.
கடந்த 1991ம் ஆண்டுக்குப் பின்னர் `இந்தியா தாராளமயமாதல் பொருளாதார கொள்கை’யை பின்பற்றியதிலிருந்து நாட்டின் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர மக்களுக்கு வீடு, வாகனங்கள் போன்றவை பொருளாதார குறியீடுகளாக இருக்கின்றது. இதனால் வீடு வாங்குவது, வாகனங்கள் வாங்குவது போன்றவையாவும் பல நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் புதிய கார்களுக்கு பதில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆட்டோ மொபைல் துறையில் வாட் மற்றும் கலால் வரி விதிக்கப்பட்ட போது 26.8 % முதல் 44 % வரை கார்களுக்கான விற்பனை வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் ஜிஎஸ்டி வரி வருகைக்கு பிறகு கார்களின் சராசரி விற்பனை வரி 18 % முதல் 28 % வரை உயர்ந்துள்ளது.
இது இதற்கு முன்பு இருந்த இரட்டை வழி வரி முறையை விட நுகர்வோருக்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. பல கார் நிறுவனங்கள் உதிரி பாகங்கள் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் உற்பத்தியை நிறுத்தின. இதனால் பல முன்னணி கார்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுமக்களுக்கு வாகனம் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக கொளத்தூர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மூலம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கார்கள் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 30.82 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையான நிலையில், 2021ம் ஆண்டு 46 லட்சம் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2026 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை 80 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது, `கார் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது, எந்த ஆண்டு வாங்கப்பட்டுள்ளது’ உள்ளிட்டவற்றை பொறுத்து அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் கார்களின் இயக்கம் வாடிக்கையாளர்கள் நம்பத்தகுந்த முறையில் பரிசோதனையும் செய்யப்படுகிறது. மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பயன்படுத்திய காரை வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் தர முன்வருவதும் மேம்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை அதிகமாவதற்கு காரணமாக உள்ளது.
மின்னணு கார் வகைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவான BS6 ரக கார்கள் உற்பத்திக்கு அரசாங்கம் அதிக அளவில் ஊக்கம் கொடுப்பதால் பழைய வகை டீசல் கார்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 2026ம் ஆண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை சந்தை 3.76 லட்சம் கோடியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் தரகர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்களுக்கு கார் உரிமங்கள் தருவது தொடர்பான நிலையான சட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்துள்ள வாகன மற்றும் சாலை வரிகள், குறிப்பிட்ட கார்களின் உற்பத்தி நிறுத்தம் - அதன் தட்டுப்பாடு, காரின் மீதான மக்களின் ஆசை ஆகியவையே பயன்படுத்திய காரை வாங்குவதற்கு மக்களை தூண்டுவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையின் பழைய கார் விற்பனை சந்தையான கொளத்தூரை நோக்கி வாடிக்கையாளர்களை அதிகம் வருவதும், இந்த நிலைமை மாற்றத்துக்கான மற்றுமொரு உதாரணம்.
- ந. பால வெற்றிவேல்
சமீபத்திய செய்தி: சரியான நேரத்திற்கு வருவதில்லை: அரசு பேருந்துகளை சிறைபிடித்த பொது மக்கள்