உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு கட்டணங்கள் உயர்வு... எவ்வளவு, ஏன்?

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு கட்டணங்கள் உயர்வு... எவ்வளவு, ஏன்?
உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு கட்டணங்கள் உயர்வு... எவ்வளவு, ஏன்?
Published on

உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயருகிறது. உடனடியாக அமலுக்கு வரக்கூடிய இந்தக் கட்டண உயர்வு, மார்ச் 31-ம் தேதி வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மே 25-ம் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே இயக்கிய விமானங்களில் 33 சதவீதம் வரை மட்டுமே இயக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. விமான பயணத்தின் நேரம் அடிப்படையில், 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச கட்டணமும், அதிகபட்ச கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு முக்கியமான காரணம், விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டவுடன் நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதற்காக முதல் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம், சில வழித்தடங்களில் விமான நிறுவனங்களிடையே கட்டணப் போட்டிகளைத் தடுக்க குறைந்த வரம்பு விதிக்கப்பட்டது. இந்தத் துறையில் திவால் நிலைகளுக்கு வழிவகுத்திருக்கக் கூடும் என்பதற்காக விமான நிறுவனங்கள் கட்டணப் போட்டிகளில் இறங்குவதைத் தடுப்பது எவ்வாறு முக்கியமானது என்பதையும் அரசாங்கம் பின்னர் சுட்டிக்காட்டியது.

கட்டண உயர்வு விவரம்:

40 நிமிடத்துக்கு குறைவான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,000-ல் இருந்து 2,200 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.6,000-ல் இருந்து ரூ.7,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.9,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.11,700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.13,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.16,900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. 150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.7,200 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.18,600-ல் இருந்து ரூ.24,200 ஆக, அதாவது ரூ.5,600 அதிகரித்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் எதையும் வெளியிடவில்லை என்றாலும், அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் காரணமாக விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இதற்கு காரணமாக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுகின்றனர். பிப்ரவரி 1 முதல் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.53,795.41 ஆக உயர்த்தப்பட்டது. இது முந்தைய காலத்தை விட 6% அதிகமாகும்.

கட்டண வரம்புகள் 30% வரை உயர்த்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட பாதைகளில் பெரும்பாலான கட்டணங்கள் தேவை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. கடந்த மாதம் 20% டிக்கெட்டுகளை சராசரி கட்டணத்திற்கு மட்டுமே விற்க வேண்டும் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதேபோல இதற்கு முன்னர், சராசரி கட்டணத்திற்குக் கீழே ஒரு விமானத்தில் குறைந்தபட்சம் 40% இடங்களை மட்டுமே விற்க விமான நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன.

எனவே, தேவை அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், கட்டணங்கள் அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. மேலும், இதுவரை இந்த கட்டண விதிகள் மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு இந்த கட்டண உயர்வு வாபஸ் பெறப்படலாம் அல்லது இதே கட்டண உயர்வு தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com