செபியின் தற்போதைய தலைவர் அஜய் தியாகியின் பதவி காலம் இன்றுடன் ( பிப் 28) முடிவடைய இருக்க்கிறது. இந்த நிலையில் புதிய தலைவராக மாதபி பூரி பச் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். செபியின் முதல் பெண் தலைவர் இவர் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் தனியார் துறையில் இருந்து செபியின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட முதல் நபர் இவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
2017-ம் (ஏப்ரல்) ஆண்டு முதல் 2021 ஆண்டு அக்டோபர் வரை செபியின் முழு நேர இயக்குநராக இருந்தார். அதன் பிறகு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். செபியின் இயக்குநர் குழுவில் இருந்த போது கூட்டு முதலீட்டு திட்டம், முதலீட்டு நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளை இவர் கையாண்டார்.
ஹிமாச்சல பிரதேச பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் தியாகி. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீண்டும் ஆறு மாதங்களுக்கும், அதனை தொடர்ந்து மீண்டும் 18 மாதங்களுக்கும் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதமே செபி தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் கடைசி நாள் வரையில் புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை என்பதால் தியாகிக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கபட்டது. ஆனால் புதிய தலைவராக மாதபி பூரி பச் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இருப்பார்.
>ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகம் படித்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதிச்சேவை துறையில் அனுபவம் பெற்றவர். 1989-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் இணைந்தார். அதனை தொடர்ந்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு மாறினார். அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இவர் இருந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள கிரேட்டர் பசுபிக் கேபிடல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். பிரிக்ஸ் அமைப்பு கொண்டுவந்த நியூ டெவலப்மெண்ட் வங்கிக்கு ஆலோசகராக இருந்தார். மேலும் பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருந்திருக்கிறார். 2017-ம் ஆண்டு செபியின் இயக்குநர் குழுவில் இணைந்தார்.
>இவர் செபியின் இயக்குநர் குழுவில் இருந்தபோது இவர் கையாண்ட வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார் என பங்குச்சந்தையை கவனிப்பவர்கள் கூறுகின்றனர்.
>என்.எஸ்.இ விவகாரம் பெரிதாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் செபிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். என்.எஸ்.இ விவகாரத்தை கையாளுவதற்காகவே பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரா?