கொரோனா வைரஸால் உலகின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முடக்கியுள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே செல்வதை முழுவதும் குறைத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அபார வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவில் மார்ச் 14 முதல் 24ஆம் தேதிக்குள் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் 30 சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் முந்தைய நாட்களில் 27% ஆக இருந்த வாட்ஸ்அப் பயன்பாட்டின் வளர்ச்சி தற்போது 41% ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் இடைப்பட்ட காலத்திலேயே இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு இந்த அளவு அதிகரித்திருக்கிறது. முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் 51% வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 76% வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரித்ததாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
குறிப்பாக வாட்ஸ்அப் பயன்பாட்டினை 18 வயதிலிருந்து 34 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பயன்பாடும் 40% வளர்ச்சியை சந்தித்துள்ளன. இந்த மூன்று ஆப்ஸ்களுக்கும் உரிமையாளர் ஃபேஸ்புக் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை மக்கள் பெரும்பாலும் நம்புவதில்லை என்ற தகவலும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தேசிய செய்திச் சேனல்கள் வெளியிடும் செய்தியை 58 சதவிகிதமும், செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை 48 சதவிகிதமும் நம்பும் மக்கள், சமூக வலைதள செய்திகளை 11% மட்டுமே நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. மேலும், ஃபேஸ்புக் மெசஞ்ஜர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் மக்கள் குரூப் கால் பேசுவது கடந்த மாதம் 70% அதிகரித்த சூழலில், வொர்க் ஃப்ரம் ஹோம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்து 1,000% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.