சுமார் 70% சரிந்த பிட்காயின் மதிப்பு - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சுமார் 70% சரிந்த பிட்காயின் மதிப்பு - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
சுமார் 70% சரிந்த பிட்காயின் மதிப்பு - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
Published on

பிட்காயினின் விலை சரமாரியாக சரிந்து கொண்டிருக்கும் போது, முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? இந்த சரிவைப் பயன்படுத்தி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? அல்லது ஒதுங்கி இருக்கலாமா?

ஆர்பிஐ, ஃபெடரல் ரிசர்வ் போன்ற உலக நாடுகளின் மத்திய வங்கிகளைப் பொருளாதார ரீதியாக அசைத்துப் பார்த்த சக்தி என்றால் அது பிட்காயின் கிரிப்டோகரன்சிதான். ஒரு நல்ல முதலீட்டாளர் அல்லது வர்த்தகர் குறைந்தபட்சம் ஒரு தசாப்த காலத்தில் பார்க்கும் வளர்ச்சியை, ஒரு பிட்காயின் முதலீட்டாளர் ஒரு சில ஆண்டுகளில் பார்த்து செட்டிலாகி விடலாம் என்பது பிட்காயின் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கை கடந்த சில மாதங்களில் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது.

பிட்காயின் உட்பட கிரிப்டோவை ஆதரிப்பவர்கள் இது தான் எதிர்காலம், இது எந்த ஒரு அரசாங்கத்தின் கீழும் வராத கரன்சி, ஏற்கனவே மைக்ரோசாஃப்ட், ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் பிட்காயினை அங்கீகரித்துள்ளன, இந்த எண்ணிக்கை காலப் போக்கில் அதிகரித்தால் தன்னிச்சையாக கிரிப்டோ உலகில் பரவலாகத் தொடங்கிவிடும் என முழங்குகிறார்கள்.

கிரிப்டோவை எதிர்ப்பவர்களோ... யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இல்லாததால் தான் இது ஆபத்தானவை, அபாயகரமானவை, இணையத்தில் திருடு போனால் கூட யாரிடமும் புகார் கூற முடியாது, முழுக்க முழுக்க இணையத்திலேயே இருக்கும் ஒரு விஷயத்தை வைத்து எப்படி சுமார் 800 கோடி பேரைக் உள்ளடக்கிய உலகப் பொருளாதாரத்தை நடத்த முடியும் என்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பிட்காயினின் விலை சரமாரியாக சரிந்து கொண்டிருக்கும் போது, முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? இந்த சரிவைப் பயன்படுத்தி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? அல்லது ஒதுங்கி இருக்கலாமா?

பாதாளம் தொட்ட பிட்காயின்:

கடந்த நவம்பர் 2021-ல் 68,500 டாலருக்கு மேல் வர்த்தகமான பிட்காயின் இன்று சுமார் 21,000 டாலருக்குக் கீழ் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. கிட்டத்தட்ட 70 சதவீதம் பிட்காயினின் மதிப்பு சரிந்துள்ளது.

பிட்காயினை பாதிக்கும் காரணிகள்:

டிமாண்ட், சப்ளை, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் மார்கெட் சென்டிமென்ட், செய்தி சுழற்சி, சந்தை நிகழ்வுகள், பூகோள அரசியல் என பங்குச் சந்தையை பாதிக்கும் அனைத்து விஷயங்களும் கிரிப்டோகரன்சிக்களையும் கடுமையாக பாதிக்கின்றன.

இது போக பிட்காயினை புதிதாக மைனிங் செய்து கண்டுபிடிப்பது, அதை யார் எப்படி நெறிமுறைப்படுத்த இருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள், எத்தனை சதவீத மக்கள் இதை அங்கீகரிக்கிறார்கள் என பல புறக் காரணங்களும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பை பாதிக்கின்றன.

பங்குகளையாவது அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை, நிதிநிலைகளை அடிப்படையாக வைத்து அளவிடுவதால் எது அதிக விலை, எது குறைந்த விலை என்பதை ஓரளவுக்காவது கணிக்க முடிகிறது. ஆனால் கிரிப்டோவில் அந்த அடிப்படை பிடிமானம் குறைவாக இருப்பதால் விலை ஏற்ற இறக்கம் அதீதமாக இருக்கிறது.

தொடர்ந்து சரியலாம்:

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு மத்தியிலான போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. இப்போரின் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல முன்னணி பொருளாதாரத்தில் பணவீக்கம் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. அது நுகர்வோர் கையில் இருக்கும் வாங்கும் திறனை மிகக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது.  போதாக்குறைக்கு அமெரிக்காவில் ரெசசன் வரலாம் என பலதரவுகள் கூறுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி, ஃபெடரல் ரிசர்வ் போன்ற உலக நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கள் நாட்டில் பணவீக்கத்தைக் குறைக்க, அடிப்படை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளனர்.

வட்டி விகிதங்களை அதிகரிக்கும் போது ஃபிக்ஸட் டெபாசிட், பாண்டுகள் எனப்படும் கடன்பத்திரங்களுக்கான வட்டி அதிகமாகக் கிடைக்கும். இது அதிக ரிஸ்க் எடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்வதற்கு பதிலாக பாதுகாப்பான வருமானங்களை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும்.

அது தற்போது நடப்பதால்தான் வட்டி விகித உயர்வுக்குப் பிறகு பங்குச் சந்தைகள் சற்றே ஏற்றம் கண்ட போதும் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு அதிகரிக்காமல் போனது என கிரிப்டோ நிபுணர்கள் பலர் கூறுகிறார்கள். கிரிப்டோக்களும் பங்குச் சந்தை போலவே மேக்ரோ பொருளாதார செய்திகளுக்கு அதிகம் ரியாக்ட் செய்யக் கூடியவை என்றும் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள் கிரிப்டோ நிபுணர்கள்.

தொடர்ந்து முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி வந்தால் பிட்காயின் உட்பட கிரிப்டோக்களின் மதிப்பு மேலும் சரியலாம் என வெஞ்சர் முதலீட்டாளர் மற்றும் டெல்டா பிளாக்செயின் ஃபண்டின் நிறுவனர் கவிதா குப்தா கூறியுள்ளார்.



பிட்காயின் 21,000 டாலரில் இருந்து மேலும் 70 சதவீதம் கூட சரிந்து சுமார் 6,000 டாலரைத் தொடலாம். கிரிப்டோவில் அதிகப்படியான பணம் முதலீடு செய்துள்ளதால், பலரும் முதலீடுகளை விற்று வெளியேறுவதால் இப்படி பிட்காயினின் மதிப்பு சரிந்து வருகிறது. பிட்காயின் 3,000 டாலரைத் தொட வாய்ப்பு இருப்பதாக யூரோ பசிஃபிக் கேப்பிட்டல் நிறுவனத்தின் முதன்மை பொருளாதார வல்லுநர் பீட்டர் ஸ்கிஃப் தன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சலனங்களுக்கு அஞ்சாதே - காத்திருங்கள்

சமீபத்தில் ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாயிஷ் வங்கி (Deutsche Bank) நடத்திய கருத்துக் கணிப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிட்காயினின் மதிப்பு 1.10 லட்சம் அமெரிக்க டாலரைக் கடக்கும் என கிரிப்டோ முதலீட்டாளர்களில் 25% பேர் கூறியுள்ளனர்.

பொதுவாகவே கிரிப்டோகரன்சிகளில் 70 - 80 சதவீத விலை ஏற்ற இறக்கம் காணப்படுவது சகஜமே என டைம்ஸ் பத்திரிகையில் சில நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே இப்போதைக்கு பிட்காயினின் மதிப்பு சரிந்தால் கூட, எதிர்காலத்தில் பிட்காயினின் விலை அதிகரிக்கும் என கியானா டேனியல் போன்ற சில கிரிப்டோ நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் கிரிப்டோ முதலீட்டில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

டிஜிட்டல் மெடாவெர்ஸ் தளத்தில் தங்கள் பொருட்களை விற்க, நைக் போன்ற பெருநிறுவனங்கள் கிரிப்டோ குறித்த பார்வையை மறு பரிசீலணை செய்து வருகிறார்கள். இது பிட்காயின் போன்ற ஒட்டுமொத்த கிரிப்டோக்களின் மதிப்பை அதிகரிக்கச் செய்யலாம் என டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

நீண்ட காலத்தில் பிட்காயினின் மதிப்பு ஒரு நல்ல ஏற்றத்தைக் காணும் என ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜுரின் டிம்மர் கடந்த அக்டோபர் மாதம் கூறியதாக சில அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.

ராபர்ட் ப்ரீட்லவ் (பாராலாக்ஸ் டிஜிட்டல் என்கிற ஆலோசனை மற்றும் டிஜிட்டல் சொத்துக்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் சி இ ஓ), மேத்திவ் ஹேலண்ட் (டெக்னிக்கல் பகுப்பாய்வாளர், பிளாக்செயின் டேட்டா பகுப்பாய்வாளர்), இயான் பலினா (கிரிப்டோ தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் 'டோகன் மெட்ரிக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர்) என பலரும் பிட்காயினின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்றே கூறியுள்ளனர்.

ஷார்க் டேங்க் நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் கெவின் ஓ லேரயின் சொத்து மதிப்பு சுமார் 3.2 பில்லியன் டாலர். அவரும் கிரிப்டோகரன்சிகள் எதிர்காலத்தில் நல்ல ஏற்றம் காணலாம் என இந்த சரிவைப் பயன்படுத்தி, கூடுதலாக முதலீடு செய்வதாக பிசினஸ் இன்சைடரில் செய்தி வெளியாகியுள்ளது.

பிட்காயினின் இந்த சரிவில் நீங்கள் முதலீடு செய்வதும், செய்யாததும் உங்கள் தனிப்பட்ட முடிவு. ஆனால் கிரிப்டோ விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதில் மட்டும் எந்தவித சமரசமும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

-கெளதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com