பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்வதுதான் இன்றும் பல தரப்பு மக்களின் முதல் திட்டமாக இருக்கிறது. ஆனால், ஆபரணத் தங்கமும் முதலீடுதான் என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான எளிய வழிகாட்டுதலைச் சொல்கிறார், Zebu Share and Wealth Managements (P) Ltd-ன் நிறுவனரும், நிதி ஆலோசகருமான V.விஜயகுமார்.
"தங்கத்தை 'சேஃப் ஹெவன்' என்று அழைப்பார்கள். அதற்கான காரணம், தங்கத்தை எந்தச் சூழ்நிலையிலும் பணமாக மாற்ற முடியும். சந்தையில் தங்கத்தின் விநியோகம் குறையும்போதும், அதன் தேவை அதிகரிக்கும்போதும் தங்கத்தின் விலை உயரும். இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு இந்தியச் சந்தையின் தங்க விநியோகம் மற்றும் தேவை மட்டுமே காரணம் கிடையாது. உலகச் சந்தையில் இருக்கும் தங்கத்தின் விலையை டாலரில் மதிப்பிடுவார்கள். இந்தியாவில் அந்த டாலரை ரூபாய் மதிப்பில் மாற்றிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் டாலரின் மதிப்பைச் சார்ந்தும் தங்கத்தின் விலை மாறி மாறி இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் தீவிரமாக அமல்படுத்த காலத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஊரடங்கு காலத்தில் மக்களிடம் நிலவிய பயத்தின் காரணமாக, ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவியது. சந்தையிலும் பிற முதலீடு முறைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. அந்தசமயத்தில் பாதுகாப்பின்மையை போக்குவதற்கு தங்கம் ஒரு நம்பிக்கை பாத்திரமாக பார்க்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையே தங்கத்தின் விலையை அதிகரிக்க முக்கியமான காரணம்.
ஊரடங்கு காலத்தில், அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை (டாலரில்) தனது உச்சத்தைத் தொட்டது. இந்தியச் சந்தையில் தீவிர கொரோனா காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது தங்கத்தின் மதிப்பு 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
பெரும்பாலான மக்கள் தங்கத்தை ஆபரணத் தங்கமாக வாங்குகின்றனர். இந்த ஆபரணத் தங்கம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையது. ஆனால், நீங்கள் முதலீட்டிற்காக ஆபரணத் தங்கத்தை வாங்குகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் 8 கிராம் தங்கம் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அதில் நடைக்கடைகாரரின் செய்கூலி 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும். நீங்கள் வாங்கும் தங்கத்தில், அதன் நெகிழ்வுத் தன்மைக்கு காப்பர் சேர்க்கப்படும். ஆக, 8 கிராம் தங்கத்தில் ஒன்றரை கிராம் காப்பர் இருக்கலாம். இன்று ஒரு கிராம் காப்பரின் விலை வெறும் 60 ரூபாய் மட்டுமே. ஆனால், நீங்கள் கொடுக்கும் தங்கத்தின் விலை, மொத்தத் தங்கத்திற்கும் சேர்த்தே இருக்கும். ஆகையால், எப்படிப் பார்த்தாலும் நீங்கள் ஆபரணத் தங்கத்தை வாங்கும்போது, அதை விற்கும்போது 24 சதவீதம் வரை உங்களுக்கு நஷ்டமே ஏற்படும்.
ஆகையால், நீங்கள் முதலீடுக்காக தங்கத்தை வாங்குகிறீர்கள் என்றால், அதை 24 கேரட் சுத்த தங்கக் கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ இருப்பது நல்லது. காரணம், அதில் நீங்கள் கொடுக்கும் விலை, மொத்தத் தங்கத்திற்கானதாக இருக்கும்.
இல்லையென்றால் ஸ்டாக் புரோக்கர்களிடம் தங்கத்தை வாங்கலாம். இதனை Gold ETF அல்லது Exchange Traded Fund என்பார்கள். அங்கு நீங்கள் முதலீடு செய்திருக்கும் தங்கத்தின் விலை யூனிட்டாக கணக்கிடப்படும். இந்த யூனிட், சந்தையில் ஏற்படும் விலைக்கு ஏற்றவாறு மாறும். இதில் உங்களுக்கு வருடத்திற்கான பரிவர்த்தனை செலவு 0.5% மட்டுமே ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக இன்னொரு வழிமுறையும் மக்களிடம் பிரபலமாகி வருகிறது. அது, தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds). இந்த முறையில் நீங்கள் தங்கத்தை முதலீடு செய்யும்பட்சத்தில், நீங்கள் வாங்கியிருக்கும் பத்திரத்தின் மதிப்பானது, தங்கம் விலையின் ஏற்ற இறக்கத்தை பொருத்து இருக்கும். பத்திரம் முடியும் காலத்தில் நீங்கள் வெளியேறும்போது, அன்றைய பத்திரத்தோடு சேர்த்து கூடுதலான 2.5 சதவீத லாபத்துடன் வெளியேறலாம்" என்றார் விஜயகுமார்.