தொலைபேசி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பான பிரச்னையை அரசும், நீதிமன்றமும் தீர்க்காவிட்டால் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என வோடஃபோன் தெரிவித்துள்ளது.
ஏஜிஆர் எனப்படும் திருத்தப்பட்ட மொத்த வருவாயில் தொலைபேசி நிறுவனங்கள் அரசுக்கு ஒருபங்கை செலுத்த வேண்டியது தொலைத் தொடர்புத் துறையின் விதிமுறை. அதன்படி, வோடஃபோன் நிறுவனம் அதிகபட்சமாக 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள நிலையில், ஏர்டெல், டாடா ஆகியவையும் கணிசமான தொகையை பாக்கி வைத்துள்ளன. அவற்றை செலுத்த கெடு விதிக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. எதிர்பாராதவிதமாக, நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் நிலுவைத் தொகையை வசூலிக்காத தொலைத் தொடர்புத் துறைக்கு குட்டு வைத்தது நீதிமன்றம்.
இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி இரவுக்குள் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது தொலைத் தொடர்புத் துறை. இதையடுத்து, வோடஃபோன் 2 ஆயிரத்து 500 கோடி தொகையை இடைக்கால தொகையாக செலுத்த முன்வந்தது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்களும் சிறுதொகையை கட்ட முன்வந்தன. வருவாயில் கணக்கிடும் பங்குத் தொகையில் மாற்றம் செய்யக் கோரியும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தொலைத் தொடர்புத் துறை செயலாளரை வோடஃபோன் ஐடியா நிறுவனத் தலைவர் குமார மங்கலம் பிர்லா நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிர்லா, இப்போது ஏதும் சொல்வதற்கில்லை, இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார். 53 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை செலுத்த வோடஃபோன் தவறும் நிலையில், அந்நிறுவனம் மூடப்பட்டால் அதன் 30 கோடி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும். ஜியோ 60 சதவிகிதமும், ஏர்டெல் 40 சதவிகிதமும் வோடஃபோன் வாடிக்கையாளர்களைப் பெறக்கூடும். பாதி ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பலன் கிடைக்காது என்றும் தெரிகிறது.