கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அச்சம் காரணமாக இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், பாலிவுட் பிரபலங்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்துவிட்டு மாலத்தீவு பறந்துவருகின்றனர். குறிப்பாக, தனி விமானத்தில்தான் அவர்கள் பெரும்பாலும் பயணம் செய்கிறார்கள்.
பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், ரன்பீர் கபூர் என இப்படி செல்பவர்கள் பட்டியல் நீளம். ஆனால், செலிபிரிட்டிகளைத் தாண்டி இப்படி மாலத்தீவு போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் பாதிபேர் உயர் நடுத்தர வர்க்க குடும்பங்கள் என்கிறது இந்தியாவின் முன்னணி தனியார் ஜெட் சார்ட்டர் நிறுவனமான ஜெட் செட்கோ.
இது தொடர்பாக பேசியுள்ள இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கனிகா டெக்ரிவால் என்பவர், "பணக்காரர்கள் மட்டுமே தனியார் ஜெட் விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள் என்று சொல்வது தவறு. சமீபத்திய வாரங்களில் ஜெட் செட்கோ 900% முன்பதிவு செய்துள்ளது. இதில் வழக்கமாக செல்லும் பணக்காரர்களைவிட 70% முதல் 80% வரை உயர் நடுத்தர வர்க்கத்தினரே அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் மாலத்தீவுக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில், நாம் உண்மையில் பார்த்தது இதுதான்.
ஏனென்றால், அவர்கள்தான் கொரோனாவுக்கு மிகவும் அஞ்சுகிறார்கள் என்று நினைக்கிறேன். எனினும் அதிகரித்து வரும் தேவைகளுக்கேற்ப விமான சேவையின் கட்டணத்தை நாங்கள் அதிகரிக்கவில்லை. ஏனென்றால் சந்தர்ப்பவாதம், தவறானதாக இருக்கும். மாலத்தீவுக்கு எட்டு இருக்கைகள் கொண்ட ஜெட் விமானத்திற்கு, 18,000 முதல் 20,000 டாலர் வரையும் அல்லது துபாய்க்கு ஆறு இருக்கைகள் கொண்ட ஜெட் விமானத்திற்கு 31,000 டாலர் வரையும் வசூல் செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.
தகவல் உறுதுணை : CNBC