ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த கோட்டக் வங்கியின் நிறுவனர் உதய் கோட்டக், முதலீடுகள் பற்றி பேசியுள்ளார். நிதி ஆலோசகர்கள் முதலீடுகள் குறித்து சிக்கலான வகையில் ஆலோசனை கூறினாலும், அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் முதலீடுகளை செய்யாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தவறான முதலீட்டை தேர்ந்தெடுத்துவிட்டு நாளை மன்னிப்பு கேட்பதற்கு பதில், இன்று முட்டாளாக இருந்துவிடலாம் எனத் தெரிவித்துள்ள உதய் கோட்டக், கோட்டக் வங்கி 40 ஆண்டுகளாக இந்த விதியைத்தான் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார். முதலீட்டு திட்டங்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே ரிஸ்க் எடுக்கலாம் என்பதை, தான் நம்புவதாகவும் உதய் கோட்டக் கூறியுள்ளார்.
கோட்டக் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய உதய் கோட்டக், சென்ற ஆண்டு பதவி விலகினார். அவருக்குப் பதிலாக, உலகின் மிகப்பெரிய வங்கிகளில் முக்கிய பதவி வகித்து வந்த வாஸ்வானி கோட்டக் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.