விமானத்தில் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.
விமானத்தில் செல்லும்போது செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்த இந்திய வான்வெளியில் அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் செல்போன் சிக்னல்களால் பாதிப்பு ஏற்படும் என்றும் இவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை. இதை அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, ட்ராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கோரியிருந்தது.
இதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பு கருத்துகளைக் கேட்டறிந்த ட்ராய், தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், விமானத்துக்குள் செல்ஃபோன் மற்றும் இணைய தள சேவையை பயன்படுத்த பயணிகளை அனுமதிக்கலாம் என ட்ராய் தெரிவித்துள்ளது.
3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இந்திய வான்வெளியில் பறக்கும் விமானங்களில் இந்த வசதியை தடையின்றி பெற வழியுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.