விதிகளை மீறும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ட்ராய் அமைப்பு செயல்படுவதாக நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் ஏர்டெல் நிறுவனம் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், போட்டியாளர்களை சமாளிப்பதற்காக அறிவிக்கப்படும் புரமோஷனல் ஆஃபர்ஸ் எனும் சலுகைகளை வழங்க ஜியோ நிறுவனத்துக்கு ட்ராய் விதிமுறைகளை ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அறிமுக சலுகைக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கால அவகாசமான 90 நாட்களைத் தாண்டி ஜியோ நிறுவனம் வழங்கி வரும் இலவச சேவைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி கடந்த சில வாரங்களுக்கு தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் ஏர்டெல் மனுச் செய்திருந்தது. இந்த மனுவில் கூடுதலாக மேலும் ஒரு கோரிக்கையை ஏர்டெல் தற்போது சமர்ப்பித்துள்ளது.
மேலும், அந்த மனுவில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனத்துக்கு ஆரம்ப காலத்தில் மற்ற நிறுவனங்கள் அளிக்கும் இண்டர் கனெக்ட் எனப்படும் இணைப்பு உதவிக்கு நிமிடம் ஒன்றுக்கு 14 பைசா என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதுவே பயனாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் அடிப்படை என்றும் குறிப்பிட்டுள்ள ஏர்டெல், இந்த நிலையில் ஜியோ நிறுவனம் அளித்துவரும் இலவச திட்டங்களை ட்ராய் வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயத்தில் இந்திய தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த புகார் குறித்த விசாரணையை பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு தகவல் தொடர்பு ஒழுங்குமுறை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.