கொரோனா பேரிடரில் குடும்பத்துக்கு அவசரகால நிதி திரட்டும் வழிகள்! - விரிவான அலசல்

கொரோனா பேரிடரில் குடும்பத்துக்கு அவசரகால நிதி திரட்டும் வழிகள்! - விரிவான அலசல்
கொரோனா பேரிடரில் குடும்பத்துக்கு அவசரகால நிதி திரட்டும் வழிகள்! - விரிவான அலசல்
Published on

உலகளவில் கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட துறைகள், மருத்துவமும் பொருளாதாரமும். இதில், மருத்துவம் குறித்து நாம் நிறைய விவாதித்திருக்கிறோம். ஆனால், பொருளாதாரம் பற்றி...? சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பங்குச்சந்தை வல்லுநர்களிடம் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அப்போது பேசிய ஒரு பொருளாதார நிபுணர், ``என்னைப் பொறுத்தவரை, தற்போதைய சிக்கல் கொரோனா இல்லை; கொரோனா வந்துவிட்டால், சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் இடமிருக்கிறதா என்பதுதான். எனக்கு தெரிந்தவரை, அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டது. மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தடுப்பூசி மையங்களும் எப்போதும் நிரம்பியே உள்ளன. எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா என ஆகிவிட்ட சூழலில், கொரோனாவை சிக்கலென சொல்ல முடியாது. அதை குணப்படுத்தும் அளவுக்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதைதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து, அடுத்து வரும் நோயாளிக்கு படுக்கை வசதி இருந்தால்தான், சூழ்நிலை சரியாவது குறித்து அடுத்தகட்டமாக நம்மால் சமாளிக்க முடியும். மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவது போல, புது நோயாளிகள் எண்ணிக்கையும் குறைய வேண்டும். அதற்கு அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எங்கும் எதற்கும் அநாவசியமாக வெளியில் செல்லக்கூடாது. என்னைக்கேட்டால், எல்லோரும் வீட்டுக்குள் இருந்தபடியே பணி செய்ய வேண்டும்" என கூறினார்.

 என்னிடம் பேசியவர், போதுமான அளவுக்கு பணம் சேமித்திருப்பவர்தான். பணம் இருந்தால், என்னவேண்டுமானாலும் செய்யலாம் என நாம் நினைக்கிறோம். ஆனால், இவரிடம் பேசியபிறகு, என்னுடைய எண்ணம் மாறிவிட்டது. இவர் நினைத்தால், எத்தனையோ பெரிய மருத்துவமனைகளில், புகழ்பெற்ற மருத்துவர்களை கொண்டு அவரால் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். தன்னால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடியும் என தெரிந்தும், அவர் அலட்சியமாக இருக்கவில்லை. மாறாக, நிலைமை உணர்ந்து, முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்.

ஆனால் நாம்...? நம்மிடம் முன்னெச்சரிக்கையும் இல்லை, விழிப்புணர்வும் இல்லை. அட, அவசர காலத்துக்கு உதவ, பணம் கூட நம்மில் பெரும்பாலானோரிடம் இல்லை.

 கடந்த ஆண்டுகளில், அவசர கால நிதி குறித்து, நிதி ஆலோசகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த போதிலும், அது குறித்து எந்த அக்கரையும் இல்லாமல் நாம் கடந்து வந்துவிட்டோம். இப்போது அவசர கால நிதியின் அவசியத்தை, காலம் நமக்கு சொல்லிக்கொடுத்துவிட்டது. ஆனால், காலம் இப்போது நமக்கு சேமிக்கும் அளவுக்கு நேரம் கொடுக்கவில்லை. இந்த பெருந்தொற்று நேரத்தில், அவசர கால நிதியை சேமிக்க கற்றுக்கொள்வதை விட, அதை எப்படி திரட்ட முடியும் என்பதையே நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நிதி திரட்டல் என்பது, திடீரென அவசர தேவை உருவாகிறது என்றால் நம்மிடம் இருக்கும் வாய்ப்புகளை வைத்து உடனடியாக எவ்வளவு நிதி திரட்டமுடியும் என்பதை யோசிப்பது. உதாரணத்துக்கு, நண்பர்கள் / உறவினர்கள் / தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது - வங்கிகள் மூலமாக கடன் பெறுவது - கிரெடிட் கார்டு பயன்படுத்துவது - நகைகளை வைத்து பணம் ஏற்பாடு செய்வது போல.

 * இவற்றில், நண்பர்கள் / உறவினர்கள் / தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது நம்மில் பலருக்கும் வரும் இயல்பான விஷயம். ஆனால், இந்த பெருந்தொற்று நேரத்தில், இவர்களிடம் எவ்வளவு பணத்தை திரட்ட முடியும் என்பதை யோசிக்கவும். ஏனெனில், இந்த பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, அவர்களுக்கும் சம்பளம் குறைந்திருக்கலாம் அல்லது அவர்கள் வேலை இழந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு எதாவது அத்தியாவசிய செலவு உருவாகி இருக்கலாம். ஆகவே இவர்களிடமிருந்து பணம் பெறுவதை, முதன்மையான தீர்வாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

 * அடுத்த வாய்ப்பு கிரெடிட் கார்டுகள். இது கத்தியை போன்றது. இந்த கத்தியை வைத்து, நல்ல நோக்கத்தில் ஆப்பரேஷனும் செய்ய முடியும் ; பழி உணர்வோடு கொலையும் செய்ய முடியும். கிரெடிட் கார்டுகளை, சரியாக பயன்படுத்தினால் அவசர தேவைக்கும் பயன்படுத்தி ஆதாயமும் பெற முடியும் ; ஒருவேளை தவறாக பயன்படுத்தினால் வட்டி மேல் வட்டி ஏறி, கடுமையான பொருளாதார நெருக்கடைக விளைவுகளை சந்தித்து, நஷ்டத்தையும் சந்திக்க முடியும். உதாரணத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை செய்யும் செலவுகளை மே மாதம் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 

ஒரு சில கார்டுகளில் இந்த அவகாசம் மாறுபடலாம். ஆனால் கிரெடிட் கார்டுகள் இப்படிதான் செயல்படும். ஆக, எந்த கிரெடிட் கார்டை, எங்கே எப்படி பயன்படுத்துவது என தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். கிரெடிட் கார்டு என்பது, உடனடியாக பணத்தை திரட்டும் ஒருவழி. அந்த வழியை பின்தொடர்ந்த பின், சரியாக பணத்தை செலுத்திவிட வேண்டும். பணம் எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அடிக்கடி பயன்படுத்துபவர்கள், சரியாக பணத்தை திருப்பி செலுத்துவதும் அவசியம். இல்லையெனில் வட்டி கட்டி மாளாது.

 * இதற்கு அடுத்த வாய்ப்பு, தங்கத்துக்கான முதலீடு. தங்கம் நகையாகவோ நாணயமாகவோ, எந்த வடிவத்தில் இருந்தாலும், அவசர தேவைக்கு அதை அடமானம் வைத்து பணத்தை திரட்டலாம். இந்த வகையில் திரட்டப்படும் பணம், நமக்கு எந்தவகையிலும் பின்னடைவை ஏற்படுத்தாது. நகையை அடமானம் வைக்கும் முன்பு, எங்கு குறைவான வட்டி என்பதை தெரிந்துகொண்டு, அங்கு அடமானம் வைப்பது நல்லது. அடமானமாக வைக்கும்போது, சூழல் சரியான பிறகு மீண்டும் நகையை மீட்டிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

 * இதற்கு அடுத்த இறுதியான வாய்ப்பு, காப்பீடு. இதுகுறித்த விழிப்புணர்வு தொடர்ந்து கொடுக்கப்பட்டே வந்தாலும் காப்பீடு குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. `எனக்கு ஏன் காப்பீடு' என்னும் கேள்வி, இப்போதும் பலருக்கு இருக்கிறது. இதுபோன்ற பேரிடர் காலத்திலும் காப்பீட்டின் அவசியம் புரியவில்லை எனில் எப்போதுதான் நமக்கு புரியுமென தெரியவில்லை. காப்பீட்டில், டேர்ம் இன்ஷூரன்ஸும், மருத்துவ காப்பீடும் அனைவருக்கும் அவசியம். இதில், டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது நமது குடும்பத்துக்கானது. குடும்பத்தலைவர் அல்லது வருமானம் ஈட்டுபவரின் மறைவுக்கு பிறகு இந்த பணம் பயன்படும்.

மருத்துவ காப்பீடு இப்படியல்ல. இது, நாம் வாழும் காலத்தில், நமக்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும். பொதுவாக, மருத்துவகாப்பீட்டை பணிபுரியும் நிறுவனமே வழங்கும். இருந்தாலும், தனிப்பட்ட முறையில் மருத்துவகாப்பீட்டை எடுத்துக்கொள்வதும் நல்லது. ஏனெனில், வேலை செய்யும் நிறுவனம் நிரந்தரமாக இருக்கும் என உத்தரவாதம் இல்லை ; அதேபோல வாழ்க்கை முழுவதும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவோம் என்றில்லை. ஆகவே, தனிப்பட்ட முறையில் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.

மேற்கூறிய பண திரட்டும் வழிகளை நம்புவதை விடவும், அவசர காலத்துக்கென பிரத்யேக சேமிப்பை உருவாக்கிக்கொள்வதுதான், எல்லா காலத்துக்கும் நல்லது. அவசர காலத்தில், எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை அறிந்து அதற்கேற்ப சேமிக்க வேண்டும். இது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையை பொறுத்தது. நிதி ஆலோசர்கள், பொதுவாக ஆறு மாதத்துக்கு தேவையானளவு நிதியை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என சொல்வதுண்டு. இதை மனதில் வைத்துக்கொண்டு, இனி செயல்படுங்கள். ஒருவேளை உங்களால் அதிகமாக சேமிக்க முடிந்தாலும் நல்லதுதான். ஒரே நாளில் இந்த தொகையை சேர்த்துவிட முடியாது. ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக திட்டமிட்டுதான் சேர்க்க வேண்டும்.

இப்படி சேமிக்கும் பணத்தை, பணம் சேர்ந்துவிட்டது என்பதற்காக, அந்த தொகையை முதலீடு செய்து பெருக்குகிறேன் என நினைத்து, எங்கும் முதலீடாக அதை மாற்றிவிட வேண்டாம். ஒருவேளை அப்படி செய்ய தொடங்கினால் என்ன தேவைக்காக இந்த நிதியை உருவாக்கினோமோ அது பயனில்லாமல் போகும். வருமானத்துக்கு ஆசைப்பட்டு, பங்குச்சந்தை அல்லது பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் அல்லது வேறு எதாவது திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். ஆனால், நீங்கள் நினைத்த நேரத்தில் எடுக்க முடியுமா, எடுத்தாலும் முதலீடு செய்த தொகை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அதனால் எமர்ஜென்ஸி நிதியை வங்கியில் வைத்திருக்கலாம் அல்லது லிக்விட் மியூச்சுவல் பண்ட்களில் போட்டுவைக்கலாம். இந்த நிதியின் நோக்கமே ஒரிரு நாளில் தேவையை பூர்த்தி செய்துகொள்வதுதான்.

 இதுவரை சேமிப்பு குறித்து யோசிக்கவில்லை என்றாலும் கூட, இனியாவது சேமிப்பை தொடங்கவும். ஏனெனில், அவசர நிதியின் அவசியத்தை, இந்த பெருந்தொற்று காலத்தை விட வேறெந்த சூழலும் மிகச்சிறந்த முறையில் நமக்கு சொல்லிக்கொடுக்க முடியாது. விழிப்புணர்வோடு செயல்படுவோமாக!

வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com