ஒரு 'லாட்' முதலீட்டுக்கு ரூ.14,820... - ஜொமோட்டோ ஐபிஒ: தெரிந்துகொள்ள வேண்டியவை

ஒரு 'லாட்' முதலீட்டுக்கு ரூ.14,820... - ஜொமோட்டோ ஐபிஒ: தெரிந்துகொள்ள வேண்டியவை
ஒரு 'லாட்' முதலீட்டுக்கு ரூ.14,820... - ஜொமோட்டோ ஐபிஒ: தெரிந்துகொள்ள வேண்டியவை
Published on

ஜொமோட்டோ நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு 'செபி' சில நாட்களுக்கு முன்பு அனுமதி கொடுத்தது. இதையடுத்து, ஐபிஓ-வுக்கு ஜூலை 14 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முறையான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்பிஐ கார்ட்ஸ் (SBI cards) நிறுவனத்தின் ஐபிஓ (IPO) வெளியானது. அந்த நிறுவனம் ரூ.10,355 கோடி திரட்டியது. தற்போது ஜொமோட்டோ நிறுவனம் ரூ.9375 கோடியைத் திரட்ட இருக்கிறது.

2010-ம் ஆண்டு 'கோல் இந்தியா' (Coal India) நிறுவனம் திரட்டிய நிதி இதுவரையிலான அதிக நிதி. அந்த நிறுவனம் ரூ.15,475 கோடியை அப்போது திரட்டியது.

ஐபிஓ தகவல்: ரூ.9,375 கோடியை ஜொமோட்டா இந்த நிறுவனம் திரட்டுகிறது. இதில், ரூ.9,000 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்படுகிறது. ஏற்கெனவே முதலீடு செய்திருந்த இன்ஃபோ எட்ஜ் (Info Edge) நிறுவனம் ரூ.375 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்கிறது. 65 லட்சம் பங்குகள் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தவிர, சிறு முதலீட்டாளர்களுக்கு என மொத்த தொகையில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

விலை மற்றும் தேதி: ஒரு பங்கின் விலையாக ரூ.72 முதல் ரூ.76 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த படம் ஒரு 'லாட்' முதலீடு செய்ய வேண்டும். ஒரு லாட் என்பது 195 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு லாட் முதலீடு செய்வதற்கு ரூ.14,820 ரூபாய் தேவைப்படும். ரூ.2 லட்சத்துக்குள் முதலீடு செய்பவர்களை சிறு முதலீட்டாளர்கள் என வகைப்படுத்தபடுவார்கள். சிறு முதலீட்டாளர்கள் அதிபட்சம் 13 லாட் (ரூ.1,92,660) முதலீடு செய்யலாம்.

ஜூலை 14 முதல் 16-ம் தேதி இந்த பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 22-ம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை பங்குகள் கிடைக்கவில்லை என்றால், 23-ம் தேதி பணம் திரும்பி வழங்கப்படும். ஜூலை 26-ம் தேதி சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களின் டிமேட் (Demat) கணக்கில் வரவு வைக்கப்படும். ஜூலை 27-ம் தேதி ஜொமோட்டோ நிறுவன பங்குகளின் வர்த்தகம் தொடங்கும்.

ஜொமோட்டோ நிறுவனத்தின் பின்புலம்: நாடு முழுவதும் இருக்கும் உணவகங்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம் இது. உணவகம் குறித்த தகவல், ரிவ்யூ, ஆர்டர், பேமென்ட் உள்ளிட்ட அனைத்தையும் இந்த செயலி மூலம் செய்ய முடியும். இந்தியாவின் 525 நகரங்களில் 3.89 லட்சம் ஹோட்டல்களை ஜொமோட்டோ இணைத்திருக்கிறது. திரட்டப்படும் நிதியில் 6,750 கோடி ரூபாயை நிறுவனத்தின் வளர்ச்சி, பிற நிறுவனங்களை இணைத்தல் மற்றும் இதர கார்ப்பரேட் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

தீபந்தர் கோயல் தொடங்கிய நிறுவனமாக இருந்தாலும், 'புரமோட்டர்கள்' என யாரும் இல்லை. புரஃபஷனல்களால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனமாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் 74 பங்குதாரர்கள் உள்ளனர். அதிகபட்சமாக இன்போ எட்ஜ் நிறுவனம் 18.68 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இதற்கடுத்து உபெர் நிறுவனம் 9.19 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. தீபந்தர் கோயல் வசம் 5.55 சதவீத பங்குகள் இருக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 900 கோடி டாலர் (ரூ.64,365 கோடி) இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2020-ம் நிதி ஆண்டில் ரூ.2,385 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறது. ஆனால், ரூ.1,010 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. 2021-ம் நிதி ஆண்டில் வருமானம் ரூ.1,993 கோடியாக இருந்தது. நஷ்டமும் குறைந்து ரூ.816 கோடியாக இருக்கிறது. கோவிட் காரணமாக கடந்த நிதி ஆண்டில் வருமானம் குறைந்திருப்பதாக தெரிகிறது.

தற்போது குரோபர்ஸ் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கி இருப்பதால் வரும் காலத்தில் உணவு மட்டுமல்லாமல் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனமாக மாறும் திட்டம் இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதன்முதலாக ஐபிஓ வெளியாகும் நிறுவனமான ஜொமோட்டோ இருக்கிறது. இன்னும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் வர காத்திருக்கின்றன.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com