ஸ்டார்ட் அப் இளவரசிகள்-16: இளம் பெண்களுக்கான நிதி வழிகாட்டி

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-16: இளம் பெண்களுக்கான நிதி வழிகாட்டி
ஸ்டார்ட் அப் இளவரசிகள்-16: இளம் பெண்களுக்கான நிதி வழிகாட்டி
Published on
தொழில்முனைவு தொடர்பாக அலெக்ஸ் டோபல் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது.
 
அலெக்ஸ் டோபலுக்கு (Alexa von Tobel) இன்னமும் 30 வயது கூட ஆகவில்லை. ஆனால் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை துவக்கி சிலிக்கான் வேலியின் கவனிக்கத்தக்க தொழில்முனைவோராக அறியப்படுகிறார். முதல் நிறுவனமான ’லேர்ன்வெஸ்ட்’ நிறுவனம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, செல்வாக்கு மிக்க பத்து பெண்களில் ஒருவர், 30 வயதுக்குள் கவனிக்க வேண்டிய 30 பேருக்குள் ஒருவர், உலகை மாற்றும் 18 பெண்களில் ஒருவர் என்பது போன்ற வெற்றி பட்டியல்களில் பலவற்றில் இடம் பிடித்துள்ளவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் முதலீட்டு நிறுவனத்தையும் துவக்கி நடத்தி வருகிறார்.
 
தொழில்முனைவோர் எனும் அடையாளத்தோடு, எழுத்தாளர் எனும் கூடுதல் அடைமொழியையும் பெற்றிருக்கும் டோபல், மாநாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் தொழில்முனைவு பற்றி பேசுவதற்காக விரும்பி அழைக்கப்படும் பேச்சாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, டோபல் பெண்களுக்கான தனிநபர் நிதி வழிகாட்டியாக விளங்குகிறார். இளம் வயதில் சாதித்ததற்காக மட்டும் அல்லாமல், தங்கள் நிதி விஷயங்களை நிர்வகிக்க கற்றுத் தருபவர் என்பதற்காகவே அவர் இளம் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் நாயகியாக இருக்கிறார்.
ஹாலிவுட் நடிகை போன்ற அழகான தோற்றத்திற்காக ’நிதி பார்பி’ (finance barbie) என அழைக்கப்பட்டாலும், டோபலின் உண்மையான சாதனை தனிநபர் நிதி வழிகாட்டுதலை எல்லோருக்குமானதாக கொண்டு வந்தது தான். அந்த வகையில் தனிநபர் ஆலோசனையை ஜனரஞ்சகமாக மாற்றியவராகவும் அவரை கருதலாம்.
நிதிக்கல்வி
நிதிக்கல்வி என்பது சிவில் உரிமை போன்றது என உறுதியாக கூறும் டோபலின் உண்மையான வெற்றி நிதிக்கல்வியின் அவசியத்தை சாமானிய பெண்கள் புரிந்து கொள்ள வைத்ததில் இருக்கிறது. டோபலின் இந்த வெற்றிக்கதை அவரது தனிப்பட்ட இயலாமையில் இருந்து துவங்குகிறது என்பது இன்னும் ஊக்கம் அளிக்கும் விஷயம். ஆம், தன்னிடம் உள்ள பணத்தை கையாளும் திறன் தன்னிடம் இல்லை எனும் உணர்வே டோபலை யோசிக்க வைத்து தொழில்முனைவில் இறங்க வைத்து, லட்சக்கணக்கான பெண்களுகான நிதி வழிகாட்டியாக உருவாக வைத்தது.
அமெரிக்காவின் புளோரிடாவில் பிறந்து வளர்ந்த டோபல் ஹார்வர்டு கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். படிப்பை முடித்த கையோடு அவருக்கு மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம். டோபலுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் தனது நிலை குறித்து கவலை அடைந்தார்.
டோபலின் கவலைக்கு காரணம், கிரெடிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தினாலும், கிரெடிட் ஸ்கோர் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்தும், ஓய்வு கால சேமிப்பிற்கான ரோத் 401 ( பென்ஷன் திட்டம்) கணக்கில் எப்படி இணைவது போன்ற விஷயங்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் இருந்தது தான்.
சுருக்கமாகச் சொன்னால், கைநிறைய டாலர்கள் புரண்டாலும் தன் பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது தனக்கு தெரியவில்லை என்பது அவருக்கு புரிந்தது. தனக்கு வந்த இந்த நிலை வேறு யாருக்கும், குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடாது என நினைத்தார். அதோடு, பள்ளிக்கல்வி மீதும் அவருக்கு கடுங்கோபம் வந்தது. பள்ளியில் நிதிக்கல்வியை முறைப்படி அளிக்காமல் விட்டுவிட்டார்களே என அவருக்கு தோன்றியது.
நிதி திட்டமிடல்
 
20 வயதில் ஒரு நிதி திட்டமிடல் தன்னிடம் இல்லாததை பெருங்குறையாக உணர்ந்தார். அது மட்டும் அல்ல, நிதி திட்டமிடலை தன்னால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவருக்கு தோன்றவில்லை. இதற்கு தீர்வு காண விரும்பியவர், இதை தனக்கான பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், தன்னைப் போன்றவர்களுக்கான பிரச்னையாக கருதி, அதற்கான தீர்வு காண தீர்மானித்தார்.
 
அதாவது நிதி விஷயங்களை திறம்பட கையாள கற்றுக்கொள்வது, அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பது என தீர்மானித்தார். இதற்காக அவர் துவங்கிய நிறுவனம் தான் லேர்ன்வெஸ்ட் (LearnVest ).
 
இந்த நிறுவனத்தை அவர் துவங்கியதற்காக முக்கிய காரணமாக, நிதி திட்டமிடலுக்கான ஆலோசனையை பெறுவது என்பது எல்லோருக்குமான வாய்ப்பாக அமையாமல் வசதி படைத்தவர்களுக்கான ஆடம்பரமாக இருந்ததுதான் என அவர் தன் வெற்றிக்கதையை விவரிக்கும் பேட்டிகளில் எல்லாம் தவறாமல் குறிப்பிட்டு வருகிறார்.
பணம் என்பது லட்சக்கணக்கான சாமானியர்களுக்கு மனம் அழுத்தம் தரும் விஷயமாக இருப்பதையும், பணத்தை நிர்வகிக்க தெரியாதது இதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் உணர்ந்தார். இந்த எண்ணத்துடன் பணத்தை நிர்வகிப்பதற்கான தனிநபர் நிதி தொடர்பான வளங்களை தேடியவர், தான் எதிர்பார்த்த விதத்தில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தனிநபர் வழிகாட்டி தகவல்கள் ஒரே இடத்தில் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.
சொந்த நிறுவனம்
இந்த எண்ணம் ஏமாற்றம் தருவதற்கு பதில், இந்தக் குறையை போக்கும் வகையிலான ஒரு சேவையை அளிக்க முடியும் என்பதற்கான வாய்ப்பு எனும் எண்ணத்தை டோபலுக்கு உண்டாக்கியது. இந்த நம்பிகையே லேர்ன்வெஸ்ட் நிறுவனத்திற்கான அடித்தளமாக அமைந்தது.
தன்னைப் போன்ற பெண்களுக்கான நிதி வழிகாட்டி சேவையை வழங்க வேண்டும் எனும் உத்வேகத்துடன் அவர் வேலையை விட்டு விலகி, தொழில்முனைவு பயணத்தை துவக்கினார். நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படிப்படியாக விவரிக்கும் 75 பக்க வர்த்தக திட்டத்தை எழுதி வைத்துக்கொண்டு நிறுவனத்திற்கு நிதி தேடி அலைந்தார்.
முதல் ஆறு மாதங்கள் சோதனையாக அமைந்தன. முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. சோர்வுடன் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டவர், தனது வர்த்தக திட்டத்தை மேலும் பட்டைத் தீட்டுவதில் கவனம் செலுத்தினார். அதோடு அவர் நிறுவனத்தை துவங்கிய காலம் உலக அளவில் கடும் பொருளாதார தேக்கம் நிலவிய 2008-ஆம் ஆண்டு என்பதால் சவால்களும், சோதனைகளும் கூடுதலாகவே இருந்தன. எனினும் விடாமுயற்சியின் பலனாக ஆரம்ப முதலீடு கிடைத்து 2009 ம் ஆண்டு லேர்ன்வெஸ்ட் நிறுவனத்தை துவக்கினார். இந்நிறுவனத்தை உங்கள் பணத்திற்கான ஜிபிஎஸ் வழிகாட்டி என்று அவர் வர்ணிக்கிறார்.
நிதி வழிகாட்டி
 
கிரெடிட் கார்டை கையாள்வது எப்படி? எந்த கடனை முதலில் அடைப்பது? அவசர கால நிதியை எப்படி உருவாக்குவது? உள்ளிட்ட தனிநபர் பாடங்களை அளித்து பெண்கள் தங்கள் நிதி திட்டமிடலை மேற்கொள்வதற்கான சேவையை வழங்கும் வகையில் லேர்ன்வெஸ்ட் தளம் அமைந்திருந்தது.
 
நிதி திட்டமிடல் சேவையை முதன்மையாக வழங்கினாலும், இது தொடர்பான அடிப்படை விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள வழிகாட்டும் உள்ளடக்கத்தையும் இந்த தளம் கொண்டிருந்தது. முதலீட்டாளர்களில் பலர், நிதிச்சேவை தளத்தில் வழிகாட்டி உள்ளடக்கம் இருப்பது சரியல்ல என்று அவரை எச்சரித்தனர். இத்தகைய மாதிரி வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் அச்சுறுத்தினர்.
 
ஆனால், டோபல் வழிகாட்டி உள்ளடக்கத்தில் உறுதியாக இருந்தார். நிதி விஷயங்கள் தொடர்பான அடிப்படையான புரிதலை அளிக்கும் எளிமையான கட்டுரைகள் அவசியம் என்று நினைத்தார். இத்தகைய தகவல்களே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பினார். இந்த புரிதலுடன் நிதி வழிகாட்டுதலை நாடுவது பொருத்தமாக இருக்கும் என்றும் நினைத்தார். இந்த இரண்டையும் அளித்த லேர்ன்வெஸ்ட் தளம் பெண்கள் மத்தியில் மெல்ல வரவேற்பை பெற்று வளர்ச்சி அடைந்தது.
தனிநபர் சார்ந்த உள்ளடக்கம் வாயிலாக பலரும் இந்த தளத்தை வந்தடைந்தனர். அவர்களில் பலர் நிதிச்சேவைகளையும், ஆலோசனைகளையும் அணுகினர். இதனால் நிறுவனம் மேலும் வளர்ந்தது. தொடர்ந்து அவரால் நிதி திரட்டவும் முடிந்தது.
நிதி விஷயங்களை சரியாக நிர்வகிக்க முடியாமல் தடுமாறிய பெண்கள் லேர்ன்வெஸ்ட் மூலம் நிதி ஆலோசனை பெற்றனர். நிதி விஷயங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவர்களுக்கு நிறைவையும், நம்பிக்கையையும் அளித்தது. இப்படி பெண்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு லேர்ன்வெஸ்ட் நிதி வழிகாட்டியாக விளங்கியது. பட்ஜெட்டிற்கான மென்பொருள்களை வழங்கியதோடு, நிதி கல்வி அளிக்கும் நிகழ்ச்சிகளையும் நிறுவனம் நடத்தி மேலும் வேகமாக வளர்ந்தது.
சவால்கள்
பெண்கள் மத்தியில் லேர்ன்வெஸ்ட் பெற்றிருந்த தாக்கமும், செல்வாக்கும் டோபலை தொழில்முனைவோராக கவனிக்க வைத்தது. செல்வாக்கு மிக்க தொழில்முனைவோராக அவருக்கு பாராட்டை பெற்றுத்தத்நது. ஊடகங்கள் அவர் வெற்றிக்கதையை விவரித்தன.
சில ஆண்டுகளில் லேர்ன்வெஸ்ட் நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், டோபல் தனிநபர் நிதி வழிகாட்டுதலை வழங்கும், பைனான்சியலி பியர்லெஸ் (Financially Fearless) புத்தகத்தை எழுதி எழுத்தாளரானார். தொடர்ந்து பைனான்சியலி பார்வேர்டு எனும் புத்தகத்தையும் எழுதினார்.
இதனிடையே டோபல் இன்ஸ்பயர்டு கேபிடல் (Inspired Capital) எனும் முதலீடு நிறுவனத்தையும் துவக்கி ஸ்டார்ட் அப்களுக்கு நிதி அளித்து வருகிறார். தொடர்ந்து தொழில்முனைவு மேடைகளிலும் மாநாடுகளிலும் முக்கிய பேச்சாளர்களாக பிரகாசித்து வருகிறார்.
தன்னுடைய வெற்றி பயணத்தில் கணவரின் ஆதரவு முக்கிய அம்சம் என கூறும் டோபல், தொழில்முனைவு தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களும் ஊக்கம் அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. தொழில்முனைவோராக இருப்பது என்பது ஓயாமல் முகத்தில் குத்தப்படுவதற்கு நிகரானது என அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். வெற்றி பெற்றுவிட்டோம் என நினைக்கும் போது புதிதாக ஒரு சவால் முளைக்கும், அல்லது சோதனைகள் உண்டாகும் என்பவர், தன்னைப் பொறுத்தவரை முகத்தில் குத்தப்பட்டதை கூட உணராமல் அடுத்தக்கட்ட வேலையில் கவனம் செலுத்தி வந்திருப்பதாக கூறுகிறார்.
மோசமான விஷயங்கள் நிகழும் போது அமைதியாகி, கவனத்தை குவித்து செயல்படுவதும் தனது வழக்கம் என்கிறார் டோபல். தொழில்முனைவில் வெற்றி பெற வேண்டும் எனில் உங்களுக்கான வழிகாட்டிகளை அருகாமையில் வைத்திருங்கள் என்பவர், உங்கள் ஐடியாக்கள் குறித்த கருத்துக்களையும் கேட்டறியுங்கள் என்கிறார். கருத்துக்கள் எதிர்மறையாக அமைந்தாலும், அவை உங்களுக்கான கண்ணாடியாக விளங்கும் என்கிறார்.
பணத்தை கையாள்வது என வரும் போது, உங்கள் வருமானத்திற்குள் செலவிடுங்கள், கடனில்லாமல் வாழுங்கள், அவசரகால நிதியை உருவாக்கி கொள்ளுங்கள் எனும் ஆலோசனைகளை வழங்குபவர், நீங்கள் பணத்தை கண்டு அஞ்சக்கூடாது என்கிறார். இதற்கான வழிகாட்டுதலே அவரது வாழ்க்கை பாதையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com