வாட்ஸ்அப் நிறுவனம் பிசினஸ் தொடர்பான புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
உலக அளவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் செயலி வாட்ஸ்அப். செய்திகள் பரிமாற்றம், புகைப்படப் பரிமாற்றம், குரல் ஒலி பரிமாற்றம், வீடியோ பரிமாற்றம் என பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகி, சுமார் 100 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. அதேபோல புதுப்புது வசதிகளும் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. வாட்ஸ்அப் பிசினஸ் (WhatsApp Business) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த செயலியில் வர்த்தகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்றும் தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பயனாளர்களும் நேரடியாக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வழக்கமான வாட்ஸ்அப் செயலியில் இருப்பது போன்ற தகவல்கள் அனுப்பும் வசதிகளும், அழைக்கும் வசதிகளும் இதில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயனாளர்கள் நிர்வாகத்தின் பெயர், அலுவகலக முகவரி என சில அடிப்படை தகவலையும், வாட்ஸ்அப் மொபைல் எண் அல்லாது புதிய மொபைல் எண்ணை கொடுத்து தங்களுக்கான கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அக்கவுண்ட் உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதற்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.