இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?

இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
Published on

இந்தியாவில் டெஸ்லாவின் உற்பத்தி ஆலைக்கான திட்டங்களைப் பற்றி கேள்வி எழுப்பிய ட்வீட்டிற்கு பதிலளித்த டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், "முதலில் கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா உற்பத்தி ஆலையை உருவாக்காது" என்றார்.

முன்னதாக,  கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி காலநிலை நடவடிக்கை குழுவில் பேசிய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 'சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களை இந்தியாவில்  விற்க வேண்டாம்' என்று டெஸ்லாவிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். மாறாக, இப்போது டெக்சாஸை தளமாகக் கொண்ட டெஸ்லா வாகன உற்பத்தியாளரை, "இந்தியாவில் கார்களை உருவாக்கவும், இந்தியாவில் விற்கவும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யவும் வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.



இந்தியா இறக்குமதி வரி அதிகம் - எலான் மஸ்க் வருத்தம்:

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் பலமுறை ட்விட்டரில் இந்தியாவின் உள்ளூர் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் அதிக இறக்குமதி வரிகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவில் டெஸ்லாவை விற்பனை செய்வதற்கான வழி உருவாகவில்லை.

2017 மற்றும் 2020 க்கு இடையில் அமெரிக்காவில் விற்கப்பட்ட 5,68,000 எலக்ட்ரிக் கார்களில் மூன்றில் இரண்டு பங்கு டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்தது. ஆனால் இந்திய சந்தையின் மின்சார வாகன விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை. 2019-20ல், இந்தியர்கள் 5,000க்கும் குறைவான மின்சார நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே வாங்கியுள்ளனர். இதற்கு காரணமாக விலை மிக அதிகமாக உள்ளதாகவும், சார்ஜிங் உள்கட்டமைப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இது தொடர்பாக 2019ல் எலான் மஸ்க், " இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு கூட இறக்குமதி வரிகள் மிக அதிகமாக (100% வரை) இருப்பதாக நான் கூறினேன். இது எங்கள் கார்களை வாங்க முடியாததாக ஆக்கிவிடும் ”என்று  ட்வீட் செய்திருந்தார். மேலும், இறக்குமதி வரிவிதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் போலவே மின்சார வாகனங்களையும் இந்திய அரசாங்கம் குறிப்பிடுவதாகவும் மஸ்க் விமர்சித்துள்ளார்.

காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மின்சார வாகனங்கள் உதவுவதால்,  உள்ளூர் உற்பத்தி மட்டுமே இந்த கார்களை மலிவு விலையில் கிடைக்க உதவும் என இந்தியா கருதுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் டெஸ்லா ஆலையை அமைப்பதற்காக சிவப்பு கம்பளம் விரித்துள்ளன.

முதலில் விற்பனை - பின்னர்தான் உற்பத்தி: டெஸ்லாவின் திட்டம்

ஜனவரி மாதத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்தது. இந்த நிறுவனம் இந்தியாவில் மூன்று ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்களுடன் சோர்சிங் பார்ட்னர்ஷிப்களைக் கொண்டுள்ளது. மேலும் உள்நாட்டில் உதிரிபாகங்களை உருவாக்க ஒரு சில உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனாலும் முதலில் வாகனங்களை இறக்குமதி செய்து அதற்கு நல்ல வரவேற்பு இருந்தால் உற்பத்தியை தொடங்கலாம் என்பது மஸ்கின் வியூகமாக உள்ளது.

இது தொடர்பாக, "இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் டெஸ்லா வெற்றிபெற முடிந்தால், இந்தியாவில் ஒரு தொழிற்சாலை உருவாக வாய்ப்புள்ளது" என்று மஸ்க் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்வீட் செய்தார். எனவே குறைந்தபட்சம் இறக்குமதி டெஸ்லா வாகனங்களுக்கு "தற்காலிக வரிசலுகை" கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.



தற்போதைக்கு, "எங்கள் அதிக அளவிலான தயாரிப்புகளின் வாடிக்கையாளர்கள் இருக்கும்" சந்தைகளில் டெஸ்லா அதிக கவனம் செலுத்துகிறது என மஸ்க் தெரிவித்துள்ளார். எனவே வட அமெரிக்கா மற்றும் சீன தொழிற்சாலைகளில் தனது திறனை டெஸ்லா அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இந்திய உற்பத்தி குறித்த மஸ்கின் இந்த கருத்துக்கள் கவனம் பெறுகின்றன.

முதலில் இறக்குமதிக்கு சலுகைகள் வழங்கட்டும், இறக்குமதி கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உற்பத்தியை தொடங்குவோம் என்பது டெஸ்லாவின் திட்டமாகவும், உள்நாட்டில் உற்பத்தியை தொடங்கினால் குறைந்தவிலையில் கார்கள் கிடைக்கும் என்பது இந்தியாவின் திட்டமாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com