இ-பார்மஸி துறையில் செயல்பட்டுவரும் '1 எம்ஜி' நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (65%) டாடா குழுமம் வாங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான சூழலில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டாடா குழும நிறுவனமான 'டாடா டிஜிட்டல்' நிறுவனத்தின் கீழ் '1 எம்ஜி' வாங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 'பிக்பாஸ்கட்' நிறுவனத்தை டாடா வாங்கி இருந்தது. அதேபோல 'கியூர்பிட்' நிறுவனத்தையும் சில நாட்களுக்கு முன்பு வாங்கி இருந்தது. இந்தச் சூழலில் தற்போது இ-பார்மஸி நிறுவனமும் வாங்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என அறிவிக்கப்படவில்லை. ஆனால், 10 கோடி டாலர் வரை இருக்கக் கூடும் என கடந்த வாரம் ஊடகங்களில் செய்தி வெளியானது.
'1 எம்ஜி' நிறுவனம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்தியா முழுவதும் 20,000 பின்கோடுகளுக்கு இந்த நிறுவனத்தின் சேவை இருக்கிறது. இந்த நிறுவனம் இதுவரை 15.6 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறது.
செக்யோயா கேபிடல், ஒமிதியார் நெட்வொர்க், இண்டெல் கேபிடல், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட சில நிறுவனங்கள் '1 எம்ஜி' நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.
டாடா குழுமம் சூப்பர் ஆப் என்னும் செயலியை உருவாக்கி வருகிறது. இதில் அனைத்து வகையான இ-காமர்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் இதர சேவைகளையும் இணைக்க திட்டமிட்டிருக்கிறது.
தவிர இ-பார்மஸி துறையிலும் பல மாற்றங்கள் கடந்த சில மாதங்களில் நடந்திருக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் நெட்மெட்ஸ் நிறுவனத்தை வாங்கியது. இவற்றை போல பார்ம் ஈஸி மற்றும் மெட்லைஃப் ஆகிய இரு நிறுவனங்களும் சில நாட்களுக்கு முன்பு இணைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.