கடந்த நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் திட்டமிட்டதை விட நிதி பற்றாக்குறை குறைவாகவே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு தணிக்கை துறையிடம் அளித்துள்ள தகவலின் படி 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக உள்ளது. அதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 1.04 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வருவாய் அதிகரித்ததுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிட் ஊரடங்கு காரணமாக அதற்கு முந்தைய ஆண்டைவிட வருவாய் 2.8 சதவிகிதம் குறைந்ததாக அதிகாரிகள் கூறினர். அதே நேரம் செலவுகள் 14.7% அதிகரித்துள்ளன. குறிப்பாக கோவிட் தொற்றை எதிர்கொள்வதற்காக அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி மூலம் திட்டமிடப்பட்ட வருவாயில் 82 சதவிகிதத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. அதே நேரம் மது விற்பனை மூலம் திட்டமிடப்பட்ட வருவாயில் 97 சதவிகிதம் கடந்த ஆண்டு எட்டப்பட்டுள்ளது.