கொரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு இருந்த கார் விற்பனையை அடைவதற்கு மேலும் இரு ஆண்டுகள் ஆகும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2019-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை 34 லட்சமாக இருந்தது. ஆனால் 2020-ம் ஆண்டில் 27 லட்சமாக குறைந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைந்த விற்பனை கடந்த 2020-ம் நிதி ஆண்டில்தான் இருந்தது. 2023-ம் நிதி ஆண்டில்தான் பழைய விற்பனையை கார் துறை எட்டும் என எம் அண்ட் எம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அனிஷ் ஷா தெரிவித்திருக்கிறார்.
"தற்போது நாம் அடுத்த அலை எப்போது வீசும் என்னும் அச்சத்தில் இருக்கிறோம். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை பொறுத்துதான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அப்போதுதான் பொருளாதாரம் மீண்டெழும்" என்றார் அவர்.
மேலும் அவர் சற்றே விரிவாக கூறும்போது, "கடந்த ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் கார் விற்பனையில் முன்னேற்றம் இருந்தது. ஆனால், இரண்டாம் அலையின் உக்கிரத்தால் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்கள்.
முதல் அலையில் நகர்ப்புறங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் அலையில் கிராமங்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்களின் செலவழிக்கும் தன்மை மாறி இருக்கிறது. கொரோனாவை கடந்த பிறகே இதர தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தற்போது எந்த முதலீட்டையும் அல்லது செலவையும் மக்கள் விரும்புவதில்லை. தமக்கோ அல்லது குடும்பத்துக்கோ ஏதாவது ஆகிவிடும் என்னும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
தடுப்பூசி போடும் வேகத்தை மிக வேகமாக அதிகரிக்க வேண்டும். இலையெனில் மேலும் புதிய சிக்கல் உருவாகும். மீண்டும் ஒரு லாக்டவுன் போடும் சூழ்நிலை வந்தால் மீண்டும் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும்" என்றார் அனிஷ் ஷா.