ஏழை மக்களுக்காக உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கும் விவகாரத்தில் முடிவு எட்டப்படாதது குறித்து இந்தியா ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம் என இந்திய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் சர்வதேச வர்த்தக அமைப்பு சார்பில் அமைச்சர்கள் நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியம் வழங்க வழிவகுக்கும் வளரும் நாடுகளின் திட்டத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தற்போதைய கூட்டத்திலும் அது தொடர்ந்ததால் மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான இந்தியக்குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள், ஏழைகளுக்கான உணவுப் பொருட்களுக்கு வழங்கும் மானியத்தின் அளவு ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி மதிப்பில் 10 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும் என்பது விதி. இதனால் ரேஷன் கடைகளில் பொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என கருதி இந்தியா எதிர்க்கிறது.