கொரோனா வைரஸ் 2ஆவது அலை மனிதர்களை மட்டுமல்ல பங்குச் சந்தைகளையும் பாதிக்க தொடங்கியள்ளது.
கொரோனா பரவலால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில்கொண்டு இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவுப்பாதையில் இருந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்றைய வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740 புள்ளிகள் குறைந்து 48 ஆயிரத்து 440 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 324 புள்ளியில் வர்த்தகம் நிறைவுற்றது.
2 நாட்களில் ஏற்பட்ட சரிவால் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் மீண்டும் கொரோனா வலுவாக பரவத் தொடங்கியுள்ளதால் பெட்ரோலிய பொருட்கள் தேவை குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.35% குறைந்து 63.54 டாலராக இருக்கிறது.