கொரோனா பாதிப்பை சீரமைக்கும் முயற்சியாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 4.4% குறைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசும், சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கி வரும் வட்டியை குறைத்திருக்கிறது.
பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள சேமிப்பு திட்டமான, பொது வருங்கால வைப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7.9 சதவிகிதத்திலிருந்து, 7.1சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி 7.9%லிருந்து 6.8%ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி 7.6%லிருந்து 6.9%ஆக சரிவடைந்துள்ளது.
சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கான வட்டி 8.4%லிருந்து 7.4%ஆக குறைந்துள்ளது. முதியோர் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 8.6%லிருந்து 7.4% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகள் வருமானம் தரும் திட்டத்துக்கான வட்டி 7.6%லிருந்து 6.6% ஆக குறைந்துள்ளது. ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 6.7%லிருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் தொடர் வைப்பு நிதிக்கான வட்டி மிக அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 7.2%விதமாக இருந்த வட்டி 5.8% ஆக சரிவடைந்துள்ளது.இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்கு இந்த வட்டி விகிதமே வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் சிறுசேமிப்பு திட்டங்களில் 12 லட்சம் கோடி ரூபாயும், வங்கிகளில் 114 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வூதியர்கள் சிறுசேமிப்பு திட்டங்களையே நம்பியுள்ளனர். மத்திய அரசு வட்டியை குறைத்துள்ள நிலையில், அவர்களின் வருமானமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.