சன் குழும நிறுவனங்களில் பங்குதாரர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கலாநிதி மாறன் குடும்பமே லாபம் அடைவதாகவும் புகார் எழுந்துள்ளது. எஸ்இஎஸ் எனப்படும் ஸ்டேக்ஹோல்டர்ஸ் எம்பவர்மென்ட் சர்வீசஸ் என்ற தொழிற்துறை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அமைப்பு இந்த புகாரை முன்வைத்துள்ளது.
சன் குழுமத்தில் கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி ஆகியோருக்கு தலா 78 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாகவும் இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊதிய செலவில் 60 சதவிகிதம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சன் குழுமத்தின் ஜெட் விமானம் வெள்ளத்தின் போது பழுதடைந்ததால் காப்பீடு தொகை 260 கோடி கிடைத்ததாகவும் இந்நிலையில் 365 கோடி ரூபாய் செலவு செய்து புதிய விமானம் வாங்கப்பட்டுள்ளதாகவும் இது தேவையா என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் குழுமத்தின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட இவ்விமானம் கலாநிதி மாறன் குடும்பத்தினர் செல்ல பயன்படுத்தப்படுகிறதா என்றும் அந் நிறுவனம் கேட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சன் குழுமம், அரசு நிர்ணயித்த இலக்கை விட குறைவாகவே செலவழித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சன் குழுமத்தின் கடந்தாண்டு நிகர லாபம் 979 கோடி ரூபாய் என்றும் இதில் விதிமுறைகள் படி சமூக நலத்திட்டங்களுக்காக 23 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலையில் 15 கோடியே 67 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் எஸ்இஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.