இந்தியப் பங்குச் சந்தைகள் ஒரு வார சரிவிற்குப் பிறகு இன்று கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 544 புள்ளிகள் அதிகரித்து 38 ஆயிரத்து 841 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 356 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.சி.எல்.டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 3 சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன.
ஒரு வாரத்தில் சென்செக்ஸ் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தன. இதனால் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து காணப்படுவதால் இன்று முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் வாங்குவதே பங்குச் சந்தைகள் ஏற்றம் காண காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 20 காசு அதிகரித்து 72 ரூபாய் 4 காசானது.