நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், பங்குச் சந்தைகள் இன்று கணிசமான உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
இன்று காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயர்ந்து 59,359 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 151 புள்ளிகள் அதிகரித்து 17,728 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில் பவர் கிர்ட், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் (ஜன.30) கோவிட் பாதிப்பை கடந்து, இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சிப்பாதையில் முன்னேறும் எனவும் இதற்கான அடித்தளம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நிதி அமைச்சகத்தின் 2021-22 ஆம் வருடத்துக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த நிதியாண்டில் (2022-23) பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதம் முதல் 8.5 சதவிகிதம் வரை இருக்கும் எனவும் அதில் கணிக்கப்பட்டிருந்தது.