இந்தியாவில் தற்போது வீசி வரும் இரண்டாவது கொரோனா அலையினால் பொருளாதார வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து மற்றும் இதற்கு முன்னர் கொரோனா பெருந்தொற்று கொடுத்த அனுபவமும் இந்த சிக்கலை எதிர்கொள்ள உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் அப்படி சொல்வதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது தடுப்பு மருந்து வந்திருப்பது. இரண்டாவது கொரோனா தொற்றை கையாள்வதற்கான முன்னெச்சரிக்கை மக்களுக்கு இருப்பது. மூன்றாவது முக்கியமாக கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் போல ஊரடங்கு நடைமுறை இல்லாதது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் வேகமாக பரவி வருகிறது. டெல்லி, மும்பை, பஞ்சாப் மாதிரியான பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. உருமாறிய கொரோனாவும் இந்தியாவில் பரவி வருகிறது.