இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருந்தொகைகள் மீதான தனது டெபாசிட் வட்டியை, நடப்பு காலாண்டில், இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.
50 முதல் 140 புள்ளிகள் வரை, அதாவது 0.5 முதல் 1.40 சதவீதம் வரையான இந்த உயர்வு ஜனவரி 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இனி வரும் நாட்களில் இவ்வங்கியில் செய்யப்படும் 45 நாள் முதல் 2 ஆண்டு வரையான கால இலக்கு கொண்ட வைப்பு நிதிக்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 10 ஆண்டு வரையான டெபாசிட்டுக்கு 5.25 சதவீத வட்டி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. "பரவாயில்லையே...! இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதானே!" என்றுதானே நினைக்கிறீர்கள். அதெல்லாம் சரிதான்... ஆனால், இந்த டெபாசிட் வட்டி உயர்வு, உங்களுக்கும், எனக்கும், அதாவது, நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு உதவுமா என்றால் சாரி! குறைந்தது 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான டெபாசிட்தொகைக்குத்தான் இந்தக் கூடுதல் வட்டி என இவ்வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.