மத்திய அரசின் புதிய ஆன்லைன் வர்த்தக விதியினால் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் கையிருப்பில் இருக்கும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஒரு மாதத்தில் விற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக்காலம் அல்லாத நாட்களிலேயே தள்ளுபடி தரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பண்டிகை காலங்களுக்காக பெரிய திட்டங்களை வகுத்து வருவது தொடர்ந்து வருகின்றன. மேலும் மெகா தள்ளுபடி விற்பனைக்காக சிறப்பு மையங்களை அமைத்து பொருள்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த சுழலில் ஆன்லைன் வணிக நிறுவனங்களால் தங்களின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வணிகர்கள் குற்றஞ்சாட்டினர். எனவே ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் விதிமுறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, FLIPKART, AMAZON உள்ளிட்ட நிறுவனங்கள் அவை பங்கு வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் கேஷ் பேக் சலுகைகள் நேர்மையாக இருக்க வேண்டும், எவ்வித பாகுபாடுகள் மற்றும் முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட பொருள் தங்கள் நிறுவனங்களில் மட்டுமே பிரதேயகமாக விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆன்லைன் நிறுவனங்கள் தணிக்கையாளர் சட்டபூர்வமாக அளித்த முந்தைய நிதியாண்டின் அறிக்கையை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இதனையடுத்து அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் கையிருப்பில் இருக்கும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஒரு மாதத்தில் விற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பு தள்ளுபடியை ஆன்லைன் நிறுவனங்கள் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.