வருமான வரியை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாவிட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கலான மத்திய பட்ஜெட்டின் போது, வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து. 2016-17 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித்தொகையை செலுத்த ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் இருக்கும் நிலையில், அதற்குள் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் நடைமுறை 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் தான் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017-18 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாமல் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேலும், நீங்கள் வருமான வரியை செலுத்த தவறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி செலுத்தத் தவறும் பட்சத்தில் 1000 ரூபாய்தான் அதிகப்பட்சமாக அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினரின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.