திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது; இதனால் வேலை வாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கெனவே சென்னையில் ஒரகடம், வல்லம் உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்து இருசக்கர வாகனங்களை (பைக்) தயாரித்து வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனங்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதனால், அதிகமான வாகனங்கள் சந்தையில் தேவைப்படுகிறது.
இதனை ஈடுகட்டும் விதமாக சுமார் ஆயிரம் கோடி முதலீட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 60 ஏக்கர் பரப்பளவில் புதிய வாகன தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, உலகமானது மின்சார வாகனங்களின் பக்கம் கவனத்தை திருப்பி கொண்டிருக்கும் தற்போதைய வேளையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூடிய விரைவில் இந்திய சந்தையில் மின்சார (Electric Bikes) வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு ஏதுவாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மேலும் ஒரு தொழிற்சாலையை அமைக்க ராயல் என்ஃபீல்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக செய்யாறு பகுதியில் 60 ஏக்கர் நிலத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 24 மாதங்களில் இந்த புதிய ஆலையில் 1,000 கோடி ரூபாயை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதலீடு செய்து வாகன உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வேலை வாய்ப்பு சற்று கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.