ஓராண்டில் 62% வரை உயர்ந்த சமையல் எண்ணெய் விலை: கட்டுப்படுத்த அரசு யோசனை
சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவது குறித்து உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் மற்றும் பல்வேறு சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் 62 சதவிகிதம் உயர்ந்துவிட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் மக்களின் மாதாந்திர மளிகை பட்ஜெட்டில் சமையல் எண்ணெய்க்கே கணிசமான தொகை ஒதுக்கவேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சுதான்ஷு பாண்டே, இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவைக்கேற்ப எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லை என்று கூறினார். நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவிகித இறக்குமதி மூலமாக மட்டுமே பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் இந்தியாவிலும் அதன் விலை உயரும் சூழல் ஏற்படுவதாக கூறிய உணவுத்துறை செயலாளர், அவற்றின் விலையை குறைக்க குறுகிய கால அளவிலும் நீண்ட கால அளவிலும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் எண்ணெய் விலையை உடனடியாக குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்குமாறும் உற்பத்தியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உணவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.