சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வணிகர்கள் சமையல் எண்ணெயை கையிருப்பு வைக்க உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உணவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் அந்தந்த மாநில நிலவரங்களுக்கேற்ப சமையல் எண்ணெய் கையிருப்பு உச்ச வரம்பை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு வரும் மார்ச் மாதம் வரை தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பண்டகச் சந்தைகளில் கடுகு எண்ணெய் வணிகத்தை மேற்கொள்வதும் கடந்த 8ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் விலைகள் கடந்த ஓராண்டில் சுமார் 46% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது