வாராக் கடன்களை வசூலிப்பதற்காக புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மே 23ஆம் தேதிக்குள் வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவது வங்கிகளுக்கு மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்திற்கே பெரிய தலைவலியாக மாறி வருகிறது. வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் புகார் உள்ளது. வங்கிகளில் பல கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்றுவிட்டு பலர் அதனை திரும்பச் செலுத்தாமல் உள்ளனர். இதனால் வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் திவால் ஆகும் நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து வாராக்கடன்களை வசூலிப்பதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்து. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மீது உச்சநீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. அதில் வாராக் கடன்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் ஒரு சுற்றறிக்கையை ரத்து செய்தது.
இதனால் வாராக்கடன்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து புதிதாக மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் மே 23ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது. முன்னதாக, வாராக் கடன்கள் தொடர்பான சுற்றறிக்கையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள கடன்களில் 180 நாட்களுக்குள் தீர்வு எட்டப்பாடாவிட்டால் அதனை வாராக்கடனாக பாவித்து திவால் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.