PT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்?

PT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்?
PT Web Explainer: ஹெச்டிஎஃப்சி புதிய கிரெடிட் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை... ஏன்?
Published on

'ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை' என்னும் தலைப்பில் பல செய்திகளை நீங்கள் பார்த்திருக்ககூடும். இதில், பாதி உண்மை; பாதி பொய். ஹெச்டிஎஃப்சி வங்கியின் புதிய டிஜிட்டல் நடவடிக்கைகள் மற்றும் புதிதாக கிரெடிட் கார்ட் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை பலப்படுத்திய பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதங்களில் இந்த வங்கியின் இணையதள பரிமாற்றத்தில் தடை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 21-ம் தேதி டேட்டா மையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இணையதள பரிவர்த்தனையில் பிரச்னை ஏற்பட்டது. இரு நாள்கள் வங்கி பரிவர்த்தனைகளை செய்ய முடியவில்லை. முன்புபோல யாரும் கடிதம் எழுதுவதில்லை. ட்விட்டரில் ஹெச்டிஎஃப்சி வங்கி குறித்து பலரும் எழுத தொடங்கினார்கள். அதனால், இது மிகப்பெரிய விவாதமாக மாறியதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியின் இந்தத் தடைக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்து பல கருத்துகளை ட்விட்டரில் எழுதி வருகிறார்கள்.

"பயப்படவேண்டாம்" – சி.இ.ஓ.

கடந்த அக்டோபர் மாதம் வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சஷிதர் ஜெகதீசன் பொறுப்பேற்றார். இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறும்போது "ரிசர்வ் வங்கியின் இந்தத் தடையால் வாடிக்கையாளர்கள் கவலையடைய தேவையில்லை. ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் வழக்கம்போல பரிவர்த்தனை செய்யலாம். எதிர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. வங்கியை தொழில்நுட்ப ரீதியில் மேலும் பலப்படுத்த இதனை ஒருவாய்பாக பயன்படுத்திகொள்வோம். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தக்கவைக்கும் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்" என வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இன்று (டிச.4) ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், செய்தியாளர்களை சந்தித்து ரெப்போ விகிதம் தொடர்பான முடிவுகளை அறிவித்தார். அப்போது, ஹெச்டிஎஃப்சி வங்கி விவாகாரம் குறித்தும் பேசினார். "நாம் டிஜிட்டல் பேங்கிங் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவரும் சூழலில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறையும். தொழில்நுட்ப காரணங்களால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாத சூழலை அனுமதிக்க முடியாது.

தொழில்நுட்பத்தை பலப்படுத்தாமல் அதிக வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்பட்சத்தில் இதுபோன்ற தடை ஏற்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற தடைகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது" என சக்தி காந்ததாஸ் கூறினார்.

"இதேபோன்று எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலியின் பரிவர்த்தனையிலும் தடை ஏற்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி இதனை ஆராய்ந்து வருகிறது. இதேபோன்ற தடை எஸ்பிஐ-க்கு தேவையா என்பதை இப்போது சொல்ல முடியாது. வங்கித்துறையை பொறுத்தவரை வரும் காலத்தில் டெக்னாலஜி முக்கிய பங்கு வகிக்கும். அதனால் வங்கிகள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு பாதிப்பா?

ரிசர்வ் வங்கியின் இந்தத் தடையால் வங்கியின் செயல்பாட்டில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தற்போது இருக்கும் கிரெடிட் கார்டுகள் செயல்படும். கார்டு காலாவதி ஆனால், புதிய கார்டு வழங்கப்படும். தொலைந்த கார்டுகள் மாற்றித்தரப்படும். இணையதள பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போதைய செயல்பாட்டில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது.

ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு சந்தையில் 26 சதவீதம் ஹெச்டிஎஃப்சி வங்கி வசம் உள்ளது. இந்தத் தடை முடிய அதிகபட்சம் ஆறு மாதம் காலம் ஆகலாம் என்பதால் சிறிதளவு சந்தையை இழக்க நேரிடலாம். ஆனால், பெரிய பாதிப்பில்லை.

டிசம்பர் மூன்றாம் தேதி இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து பங்குசந்தை வர்த்தகத்தில் இந்த வங்கி பங்கு 2 சதவீதம் அளவுக்கு சரிந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் சிறிதளவுக்கு உயர்ந்து முடிந்திருக்கிறது.

பங்குச்சந்தை வல்லுநர்களும் இந்தத் தடையால் வங்கியின் செயல்பாட்டிலோ, லாப விகிதத்திலோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற வங்கிகளும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது!

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com