கொரோனா பேரிடர் காரணமாக, தங்க நகைகளை அடமானம் வைப்பது அதிகரித்து வருகிறது. அதேசமயம், கடந்த ஆண்டு அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஏலம் விடுவதும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான விளம்பரங்கள் அடிக்கடி செய்தித்தாள்களில் வெளியாகின்றன. சாமானிய மக்களின் கையறு நிலையையே இது காட்டுகிறது. இதன் பின்னணியை, இங்கு விரிவாக காணலாம்.
என்ன காரணம்?
கோவிட் இரண்டாம் அலையால் மீண்டும் லாக்டவுன் போடப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் முடங்கியது. இதனால் வருமானம் குறைந்தது. வருமானம் குறைவாக இருப்பதால் அடகு வைக்கும் சூழல் மீண்டும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை ஏற்கெனவே அடகு வைத்திருந்தால், அதற்கான தொகையை செலுத்த முடியாமல் போகும். இதனால் நகைகளை அடமானம் பெறும் நிறுவனங்கள் ஏலம் விடத் தொடங்கி இருக்கின்றன.
தவணைத் தொகையை செலுத்தாதது மட்டுமல்லாமல், தங்கத்தின் விலை குறைந்ததும் ஒரு காரணமாகும். முதல் அலையில் 10 கிராம் தங்கம் 56,000 ரூபாய் வரை சென்றது. ஆனால், அதன்பிறகு சரிந்து ரூ.46,000 வரை குறைந்தது. முதல் அலை காரணமாக தங்க நகையின் மதிப்பில் அதிகபட்சம் 90 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதனால், கடந்த ஆண்டு அதிக தொகையை வாடிக்கையாளர்கள் பெற்றிருப்பார்கள். ஆனால், தற்போது தங்கத்தின் மதிப்பு குறைந்திருப்பதால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு ஏலம் விடுவதை தவிர வேறு வழி இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது.
'இந்த ஆண்டு நாங்கள் ஒரு டன் அளவுக்கான தங்கத்தை ஏலம் விட்டிருக்கிறோம். வழக்கமான சூழலுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக அளவு' என 'மணப்புரம்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.பி.நந்தகுமார், பங்குச்சந்தை வல்லுநர்களிடம் தெரிவித்திருக்கிறார். 'பொருளாதார ரீதியில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்களின் பணப்புழக்கம் குறைந்திருப்பதே இந்த சிக்கலும் காரணம்' என அவர் தெரிவித்திருக்கிறார்.
உதாரணத்துக்கு ரூ.10,000 மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்து ரூ.9000 பெற்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், தற்போது தங்கத்தின் மதிப்பே 9000 ரூபாய் என்னும் அளவில் இருந்தால் அடமான நிறுவனங்களுக்கு விற்பதை தவிர வேறு வழியில்லை. வாடிக்கையாளர்களும் குறைந்த மதிப்புள்ள தங்கத்துக்கு வட்டி செலுத்துவதை தவிர்க்கக் கூடும். நஷ்டம் வராமல் தவிர்ப்பதற்கு தங்கத்தை விற்கும் நிலை உருவாகிறது.
தவிர்க்க முடியாத சூழலில் ஏலம் சென்றால் கூட சம்பந்தபட்ட நாளின் விலையில் 95 சதவீதம் வரை மட்டுமே ஏலம் எடுக்கப்படுகிறது என தெரிகிறது.
தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரையில் கடன் கொடுக்கலாம் என்று அறிவித்தாலும், நாங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என 'கத்தோலிக் சிரியன்' வங்கியின் நிர்வாக இயக்குநர் சிவிஆர் ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார். இதனால் லாப வரம்பு குறைவது மட்டுமல்லாமல், கடன் தவணையை வசூல் செய்வதிலும் சிக்கல் உருவாகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் தங்க நகைக் கடன் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடி. ஆனால், இதில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் முறைப்படுத்தப்படாத நகைக் கடைகளில் அடகு வைக்கப்படுகிறது. இவை எந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுப்பாட்டிலும் வராது. அதேசமயம் இந்த நிறுவனங்களின் வட்டி விகிதமும் அதிகம்.
தங்கத்தை அடமானம் வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அவசர தேவைக்கு தங்கம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதிக தொகை கிடைக்கிறது என குறைவான அளவு தங்கத்தை அடமானம் வைத்தால், அந்த நகையை இழக்க வேண்டி இருக்கும். அதே போல எவ்வளவு தொகை கிடைக்கிறது என்பது மட்டுமல்லாமல், எந்த வட்டிக்கு அந்த தொகை கிடைக்கிறது என்பதும் முக்கியம்.
- வாசு கார்த்தி