பணப்பரிமாற்ற சேவை நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களின் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைப்பதற்கு ரிசர்வ் வங்கி மேலும் 6 மாதம் அனுமதி வழங்கியுள்ளது.
பேமென்ட் கேட்வே எனப்படும் பணப்பரிமாற்ற சேவை நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டு தகவல்களை தமது சர்வரில் சேமித்து வைப்பது தற்போது வாடிக்கையாக உள்ளது. ஆனால் இது போன்று செய்வது தவறுக்கு வழிவகுக்கும் என கருதிய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை 2022ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து சேமித்து வைக்கக்கூடாது என உத்தரவிட்டது.
அதற்குபதிலாக டோக்கனைசேஷன் என்ற சிறப்பு சங்கேத குறியீடு மூலம் பணப்பரிமாற்ற சேவையை வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த புதிய முறையை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து டோக்கனைசேஷன் முறைக்கு மாற மேலும் 6 மாத அவகாசம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.