பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இதுவரை வரை இல்லாத அளவாக நாட்டின் பொருளாதாரம் -23.9% சரிந்துள்ளது.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் இயங்கும் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், 2020-21 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி -23.9% சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2019-20 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 3.1% இருந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த எச்சரிக்கைகளை மத்திய அரசு உதாசீனப்படுத்தியதால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொருளாதாரம் மைனஸ் 24% அளவுக்கு சரிந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதேநேரம் இந்த வீழ்ச்சியை கண்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என அசோசெம் அமைப்பின் தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தானி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மூன்று மாதங்களாக எந்தத் தொழிலும் இயங்கவில்லை என்றும், இதன் காரணமாகவே வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2015-16 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.1 இருந்த நிலையில், அதன் பின் வந்த ஆண்டுகளில் சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. 2019 ஆம் ஆண்டிற்குப் பின் அந்த வளர்ச்சி பாதியாக குறைந்து அந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4 புள்ளி அளவில் குறைந்து, 2019-20 ஆண்டின் நான்காவது காலாண்டில் 3 புள்ளி ஒரு சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில் இந்த பெரும் வீழ்ச்சியை ஜிடிபி சந்தித்துள்ளது.
குறிப்பாக வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு துறைகளில் 47 சதவிகிதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் 39.3 சதவிகித அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதில் கட்டுமான துறையில் தான் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் துறையில் மட்டும் 50.3 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சுரங்கத் துறையில் உற்பத்தியை மேற்கொள்வதில் போராடி வந்த நிலையில், தற்போது அந்த துறையும் 23.3 சதவிகித வீழ்ச்சியை கண்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிவாயு துறையிலும் 7 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறது. கொரோனா காலத்திலும் வீழ்ச்சியை சந்திக்காத ஒரே துறை எதுவென்றால் அது விவசாயம் மட்டுமே. அந்த துறையில் மட்டும் 3.4 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.