இந்தியாவின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான பிவிஆர், தென்னிந்தியாவின் முன்னணி சினிமா நிறுவனமான சத்யம் சினிமாஸை வாங்குகிறது.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றாக எஸ்பிஐ சினிமாஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் திரையரங்குகளில் ஒன்றான ராயப்பேட்டை, சத்யம் திரையரங்கம் சென்னையின் பிரபலமான திரையரங்கமாக திகழ்கிறது. சென்னையில் மட்டும் பேலாஸ்ஸோ, எஸ்கேப், ராயப்பேட்டை சத்யம், சத்யம் எஸ்2 பெரம்பூர், எஸ்2 தியாகராஜா என 5 இடங்களில் இதன் திரையரங்குகள் உள்ளன. இதுதவிர புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இதன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மொத்தம் 10 நகரங்களில், 76 திரைகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில், எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவீதம் பங்குகளை, பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பிவிஆர் சினிமாஸ் உலகின் 7வது பெரிய சினிமா நிறுவனமாக திகழ்கிறது. உலகம் முழுவதும் 60 நகரங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 152 திரையரங்கங்கள், 706 திரைகள் உள்ளன. தற்போது எஸ்பிஐயின் பங்குகளை வாங்கியதால் இதன் திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது. எஸ்பிஐ பங்குகளை ரூ.633 கோடிக்கு பிவிஆர் வாங்கியுள்ளது. தற்போது பங்குகள் விலைபேசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகையை இன்னும் 30 நாட்களுக்குள், எஸ்பிஐ பங்குதாரர்களுக்கு பிவிஆர் வழங்கவுள்ளது. அதன்பின்னர் 9-12 மாதங்களுக்குள் எஸ்பிஐ சினிமாஸ், பிவிஆர் சினிமாஸுடன் இணைக்கப்படும்.