'அன்றாட பொருள்களுக்கான மக்களின் தேவையை கணிக்கவே முடியலை!' - திணறும் FMCG நிறுவனங்கள்

'அன்றாட பொருள்களுக்கான மக்களின் தேவையை கணிக்கவே முடியலை!' - திணறும் FMCG நிறுவனங்கள்
'அன்றாட பொருள்களுக்கான மக்களின் தேவையை கணிக்கவே முடியலை!' - திணறும் FMCG நிறுவனங்கள்
Published on

தேவையை சரியாக கணிக்க முடியவில்லை என எப்.எம்.சி.ஜி. வகை நிறுவனமான ‘ஹெச்.யு.எல்’ என்ற நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் மேத்தா, தெரிவித்திருக்கிறார்.

எப்.எம்.சி.ஜி (Fast-moving consumer goods) எனப்படும், நாம் அன்றாடம் பயன்படுத்தகூடிய பொருள்களான சோப்பு, டீ, காபி, சாக்லேட், துணி துவைக்கும் பவுடர், குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள், பிஸ்க்ட் உள்ளிட்டவற்றின் தேவையென்பது, எப்போதும் நிலையாக இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் தற்போதைய கொரோனா இரண்டாவது அலையில், இதன் தேவையை சரியாக கணிக்க முடியவில்லை என எப்.எம்.சி.ஜி. வகை நிறுவனமான ‘ஹெச்.யு.எல்’ என்ற நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் மேத்தா, தெரிவித்திருக்கிறார்.

‘ஹெச்.யு.எல்’ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில், மார்ச் காலாண்டில் நிகர லாபம் 41 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியவந்துள்ளது. இதுபற்றி பேசும்போது, ‘அடுத்த சில வாரங்களுக்கு தேவை எப்படி இருக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை’ என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசியவர், “கடந்த இரு வாரங்களாக தேவை மிகவும் குறைந்திருக்கிறது. இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் போல, நிலைமை மோசம் இல்லை. கடந்த ஆண்டில் இந்த நேரத்தில், முழுமையான பொதுமுடக்கம் அமலில் இருந்தது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தான் அமலில் இருக்கிறது. இருப்பினும், கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் விற்பனை குறைந்துவருகிறது.

எங்களுடைய அனைத்து ஆலைகளும் இயங்கி வருகின்றன. ஆனால் பொருட்களை கொண்டுசெல்வதில் சிக்கல் இருக்கும் இடங்களில் விற்பனை பாதிக்கிறது. இன்னும் சில வாரங்களுக்கு பிறகுதான் முழுமையான தேவை தெரியவரும்.

மேலும் எங்களுடைய பணியாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் வர்த்தக தொடர்பில் இருக்கும் சுமார் 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசிக்கான வசதியை செய்து தரவும் திட்டமிட்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

அதிக சப்ளை

கோவிட்-19 உச்சத்தை தொட்டிருப்பதால், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக சரக்குகளை விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வருகின்றன. லாஜிஸ்டிக்ஸ் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக கூடுதல் சரக்குகளை அனுப்பி வைக்கின்றன. இன்னும் சில நிறுவனங்களும், இதேபோல கூடுதலாக பொருட்களை அனுப்பி வைக்கின்றன.

இதற்கு முன்பு, சிறு சிறு பாக்கெட்டில் பொருள்கள் வந்துகொண்டிருந்த பொருள்களெல்லாம், இப்போது பெரிய பாக்கெட்டில் வருகின்றன. காரணம், முன்பு சிறு பாக்கெட்டுகள்தான் விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஏற்பட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு, பெரிய பாக்கெட்களை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் நிறுவனங்களே முன்வந்து, 400 கிராம்க்கு மேலே உள்ள பாக்கெட்களை சந்தைக்கு அனுப்பி வைக்கின்றன. கடந்த ஆண்டு சப்ளையில் பிரச்சினை ஏற்பட்டதுபோல இந்த முறை ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கையாக உள்ளார்கள்.

பாதுகாப்பு

இரண்டாவது கொரோனா அலையில் பணியாளர்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க எப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, "எங்களுடைய விற்பனை பிரதிநிதிகளை சந்தைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறோம். இதன் காரணமாக எங்களுடைய வருமானம் குறைந்தாலும் அதனால் கவலைப்படபோவதில்லை” என பிரிட்டானியா நிறுவனத்தின் தலைவர் வரும் பேரி தெரிவித்திருக்கிறார். “ஒரு வேளை விற்பனை சரிந்தால் கோவிட்டுக்கு பிறகு விற்பனையை எங்களால் உயர்த்திக்கொள்ள முடியும். எங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை” என தெரிவித்திருக்கிறார் அவர்.

மாண்டலேஸ் இந்திய நிறுவனத்தின் தலைவர் தீபக் ஐயர் கூறும்போது, “நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமபுரங்களில் இருக்கும் விற்பனை பனியாளர்களையும் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தி இருக்கிறோம். எங்களுடைய ஆலைகள் முழுமையாக இயங்கினாலும் அதிகபட்ச பாதுகாப்புடன்தான் இயக்கி வருகிறோம்” எனக்கூறியுள்ளார். இவை தவிர சாம்சங், பெப்சி, நெஸ்லே உள்ளிட்ட பல நிறுவனங்களும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.

ஹேண்ட் வாஷ்

சில மாதங்களுக்கு முன்பு ஹேண்ட்வாஷ், சானிட்டைசர் உள்ளிட்ட சுகாதாரபொருட்களுக்கான தேவை குறைந்தது. ஆனால் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியதால், இந்த பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் வினியோகம் செய்வதில் எம்.எப்.சி.ஜி. நிறுவனங்கள் வேகமாக உள்ளன. சந்தையில் தேவையும் அதிகரித்திருப்பதாக இந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த இரு காலாண்டுகளுக்கு இதன் தேவை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் நிறுவனத்தின் அனைத்து பொருட்களின் விற்பனையும் சிறப்பாக இருக்காது என்பது மறுக்கத்தக்கதல்ல. ஆகவே குறைவான வருமானம் கொடுக்கும் பொருட்களை நீக்குவது குறித்தும், இந்த சமயத்தில் எப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் பரிசீலனை செய்வதுவருவதாக தெரிகிறது. தவிர அதிகம் விற்பனையாகாத பொருட்களை ஷெல்ப்களில் வைக்கப்படுவதை கடைக்காரர்களும் விரும்புவதில்லை என்பதால் கோவிட் காலத்தில் இந்த மறுசீரமைப்பையும் எப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் செய்ய இருக்கின்றன.

எப்.எம்.சி.ஜி. நிறுவனங்களுக்கு விற்பனை குறையாது என்றாலும் இரண்டாம் அலை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com