தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி... ஏன்?

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி... ஏன்?
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி... ஏன்?
Published on

சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பல மாநிலங்களில் உருளைக்கிழங்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு குவின்டால் உருளைக்கிழங்கு தற்போது ரூ.500-ல் இருந்து ரூ.700 ரூபாய் வரை விற்கப்படுவதாக முக்கிய சந்தைகளில் திரட்டப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் மார்ச் மாதத்திலேயே உருளைக்கிழங்கு ஒரு குவின்டால் ரூ.1,200-ல் இருந்து ரூ.1,300 வரை விற்கப்பட்டதாக விவசாயிகள் நினைவுகூர்ந்து வேதனைப்படுகிறார்கள்.

உருளைக்கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்படும் பிராந்தியங்களில் உள்ள மொத்த சந்தைகளை தவிர, உருளைக்கிழங்கு அதிகம் சில்லறை வியாபாரத்தில் விற்கப்படும் டெல்லி போன்ற இடங்களிலும் உருளைக்கிழங்கின் விலை சரிந்துள்ளது. தேசிய தலைநகரான டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஏழு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவதாக சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 10 ரூபாய்க்கு மொத்த வியாபாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் சென்னையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 17 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இதுவே தற்போது உருளைக்கு இந்தியாவில் கிடைக்கும் அதிகபட்ச விலை என்றும் சுவாரசியமான தகவல், மத்திய அரசு திரட்டும் புள்ளிவிவரங்களில் கிடைத்துள்ளது.

விலைவாசியை நுணுக்கமாக கண்காணிக்க மத்திய அரசு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புள்ளிவிவரங்களை தொடர்ந்து திரட்டுகிறது. உருளைக்கிழங்கை தவிர வெங்காயம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வாழைப்பழம், முட்டை போன்ற மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலையை அரசு கண்காணிக்கிறது.

வருடத்துக்கு 50 மில்லியன் டன் உருளைக்கிழங்கு இந்தியாவில் அறுவடை செய்யப்படுகிறது. பெரும்பாலும் குளிர்காலத்தில் பயிர் செய்யப்படும் உருளை, சமையலுக்கு மட்டும் ஒவொரு வருடமும் 35 மில்லியன் டன் பயன்படுத்தப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உருளை சிப்ஸ் போன்ற நொறுக்குதீனிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு மாதங்களில் உருளைக்கிழங்கு விலை கிட்டத்தட்ட 50% வரை சில்லறை வியாபாரத்தில் சரிந்து இருப்பதால், நுகர்வோருக்கு மலிவான விலையில் உருளைக்கிழங்கு கிடைக்கிறது. இதனால் உருளைக்கிழங்கை அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் பயனடைகிறார்கள் என்றாலும், அதேசமயத்திலே மொத்த வியாபாரத்தில் விலை சரிந்து இருக்கும் காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிலசமயங்களில் மொத்தவிலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும், சில்லறை வியாபாரத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால், தற்போது உருளைக்கிழங்கு விலை மொத்த வியாபாரத்தில் மட்டுமல்லாது, சில்லறை வியாபாரத்திலும் குறைந்துள்ளது.

உருளைக்கிழங்கின் விலை சரிவுக்கு காரணம் அமோக விளைச்சல் என்று அரசு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமோக விளைச்சல் காரணமாக டிசம்பர் மாதம் தொடங்கிய உருளைக்கிழங்கு அறுவடை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய விளைச்சல் சென்றவருட மகசூலைவிட கிட்டத்தட்ட 35 சதவிகிதம் அதிகம் என பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு திரட்டி இருக்கும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

உருளைக்கிழங்கு விரைவில் அழுகும் பொருள் இல்லை என்பதால், அதை சரியான முறையிலே பல வாரங்கள் வரை குளிர்பதன வசதி இல்லாமலேயே பராமரிக்க முடியும். அதன்பிறகும் குளிர்பதன கிடங்குகளிலே பராமரித்து உருளைக்கிழங்குகளை கெடாமல் பல மாதங்களுக்கு பாதுகாக்கலாம். இப்படி குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உருளைக்கிழங்குகள் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை தயாரிப்பதற்காக நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்றன.

உருளைக்கிழங்குகளை ரக வாரியாக பிரித்து, சிறிய வகை கிழங்குகள் குறைந்த விலைக்கும் மேலும் பெரிய அளவிலான சிறப்புரக உருளைக்கிழங்குகள் அதிக விலையிலும விற்கப்படுகின்றன. இதைத்தவிர மலைப்பாங்கான பிரதேசங்களில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு கூடுதல் ருசி உடையது என்பதால், அதற்கும் கூடுதல் விலை கிடைக்கிறது. அதே போல் "பேபி பொட்டேட்டோ" என்று சொல்லப்படும் சிறியரக உருண்டை வடிவத்திலான உருளைக்கிழங்குகளும் தரத்தைப் பொறுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உருளைக்கிழங்கு வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதன் காரணமாக வட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மண்டிகளில் விலை சரிந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தற்போது சென்ற வருடம் மார்ச் மாதம் இருந்ததில் பாதி விலையில் உருளைக்கிழங்கு கிடைப்பதாக மத்திய அரசு புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறிந்துள்ளது. ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு விலை குறைந்திருப்பது நல்லதே என்று அதிகாரிகள் கருதுகின்றனர். அதேசமயத்தில் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது கவலை அளிக்ககூடிய தகவலாக உள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com