பட்ஜெட் பரப்பரப்புகள் அடங்கிய பிறகு ஒவ்வொரு 'விஷயமாக' வெளியாகத் தொடங்கி இருக்கிறது. 'பிஎஃப்-க்கு வரியா?' என பதற்றப்பட வேண்டாம். ஆனால், பிஎஃப் வரி விதிமுறைகளில் சிறிய மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கிறது. என்ன மாற்றம் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு EEE (Exempt - Exempt - Exempt) பிரிவு குறித்து புரிந்துகொள்ளலாம்.
ஒரு தொகையை முதலீடு செய்யும்போது, அந்தத் தொகைக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். அந்த முதலீட்டின் மீதான வருமானம் வந்துகொண்டிருக்கும்போது, அந்த வருமானத்துக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். மூன்றாவது, மொத்த முதலீட்டை வெளியே எடுக்கும்போதும் வரி இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது அனைத்து வகைகளிலும் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த 'இஇஇ' பிரிவில் உள்ள மிகச் சில திட்டங்களில் பிஎஃப் முறையும் ஒன்று. அதனால், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் விருப்ப பிஎஃப்-ல் (voluntary PF – VPF) முதலீடு செய்வார்கள்.
அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைபடியில் 12 சதவீதம் பிஎஃப்-ல் முதலீடு செய்ய வேண்டும் என்பது விதி. பணியாளர்கள் விருப்பப்பட்டால் இதற்கு மேலான தொகையை கூட விபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம். (80 சி பிரிவின் கீழ் மொத்தமாக 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்து வரிவிலக்கு பெற்றுக்கொள்ளலாம்) பணியாளர்கள் விருப்பப்பட்டால் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை மொத்தமாக கூட விபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம். காரணம், இந்த முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானமும், இந்த முதலீட்டை எடுக்கும்போது வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த பிஎஃப் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு. ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயை மட்டுமே பி.எப்-ல் முதலீடு செய்து வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை இந்த தொகைக்கு மேலான தொகையை செலுத்தும் பட்சத்தில் அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டி, வருமானமாக கருதப்பட்டு வரி செலுத்த வேண்டி இருக்கும் என விதிமுறையில் மாற்றம் செய்திருக்கிறது மத்திய அரசு.
உதாரணத்துக்கு, ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய் அளவில் பி.எப்-ல் ஒருவர் முதலீடு செய்கிறார் என கொண்டால், கூடுதலான 50,000 ரூபாய்க்கு கிடைக்கும் வட்டியை, வருமானமாக கணக்கிட்டு சம்பந்தப்பட்ட நபரின் வருமான வரி அளவுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் என மாற்ற அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட வங்கி டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு எப்படி வரி செலுத்துகிறோமே இதற்கும் வரி செலுத்த வேண்டும்.
யாருக்கு பாதிப்பு?
ஆண்டுக்கு தோராயமாக ரூ.20 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் 2.50 லட்ச ரூபாய்க்கு மேல் பிஎஃப் தொகையை கட்டாயமாக செலுத்த வேண்டும். தவிர பணியாளர்கள் விரும்பி பி.எப். கணக்கில் செலுத்துபவராக இருந்தால் எவ்வளவு தொகையை செலுத்துகிறோம் என்பதை திட்டமிட்டு செலுத்த வேண்டும்.
'நாங்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்குதான் வரி விதிக்கிறோம். இதனால் நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வரிச்சலுகையும் பெற்றுக்கொண்டு 8 சதவீத வருமானமும் பெறுவது சரியாக இருக்காது. அதனாலே இந்த தொகைக்கு ஓர் எல்லையை நிர்ணயம் செய்தோம்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
மொத்த பிஎஃப் சந்தாதாரர்களில் 0.27 சதவீத சந்தாதாரர்கள் மட்டுமே இந்த எல்லைக்குள் வருவார்கள் என வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது. (1.23 லட்சம் சந்தாதாரர்கள்). இவர்களின் தொகை மட்டும் ரூ.62,500 கோடி ரூபாய் இருக்கிறது. இந்தத் தொகைக்கு அதிக வட்டி மற்றும் வரிச்சலுகையை இவர்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கிறது.
பெயரை குறிப்பிடாமல் தனிநபர் ஒருவர் பி.எப்-ல் 100 கோடி முதலீடு செய்திருக்கிறார் என வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது. பிஎஃப் சந்தாதாரர்களில் அதிக தொகை வைத்திருக்கும் முதல் 100 நபர்களிடம் உள்ள மொத்த தொகை ரூ.2000 கோடி.
பெரும் பணக்காரகளில் சராசரியாக 5.92 கோடி ரூபாய் பிஎஃப் கணக்கில் முதலீடு செய்திருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 50 லட்ச ரூபாய் வட்டியை எந்தவிதமான வரியும் இல்லாமல் நாம் வழங்கிகொண்டிருக்கிறோம். அதனால்தான் உச்சபட்ச எல்லையை வகுத்தோம். இந்த மாற்றத்தால் நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வருமான வரி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
தற்போதைய விதிமுறைகளின்படி பிபிஎஃப்-ல் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்ய முடியாது. அதேபோல பிஎஃப்-ல் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்யும்போது வரிச்சலுகை பெற முடியாது.
- வாசு கார்த்தி