நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 6 ரக வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் மாசு அதிகரித்து சிரமத்தை ஏற்படுத்தும் நிலையில், வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா 3-ஆம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஏற்படும் காற்று மாசிற்கு வாகனங்களில் இருந்து வெளி வரும் புகையும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையும் பெரும் பங்கு வகிக்கின்றன. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவை குறைக்கும் வகையில் BS 6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் வருகின்ற ஏப்ரல் 1 முதல் விற்பனைக்கு வருகின்றன. இதன் மூலம் வருகிற ஏப்ரல் 1 முதல் BS 6 ரக வாகனங்கள் மட்டுமே சந்தையில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசு படிப்படியக குறைவது ஒருபுறமிருந்தாலும், வாகனங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காற்று மாசினை குறைப்பதற்கு வாகனங்களின் பங்குடன் எரிபொருட்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். இதை கவனத்தில் கொண்டு பிஎஸ் 6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்காக பிரத்யேகமான எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த BS 6 ரக எரிபொருட்களில் சல்பர் சேர்மத்தின் அளவு 50 PPM அளவில் இருந்து 10 PPM அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இது சூழலுக்கு உகந்த எரிபொருளாக இருக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. BS 6 ரக எரிபொருட்களை BS 4 ரக வாகனங்களுக்கு உபயோகித்தால் எந்த சிக்கலும் இல்லை என கூறும் இந்திய ஆயில் நிறுவனம், பிஎஸ் 6 எரிபொருள் விலை இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது
BS 6 ரக வாகனங்களுக்கான புதிய எரிபொருளை தயார் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகக் கூறுகின்றன. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக BS 6 ரக வாகனங்களுக்கான பெட்ரோல் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.