சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் அதேநேரத்தில் சர்வதேச சந்தையில் பிரென்ட் (Brent) கச்சா எண்ணெய் சுமார் 13 டாலர் குறைந்துள்ளது. ஆனாலும் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துகொண்டே இருக்கின்றது.
கடந்த மார்ச் 21ஆம் தேதி வரை சுமார் 137 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. கடந்த மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.16-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.92.19 -க்கும் அதிரித்தது. அன்றைய தினத்தில் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் 115.48 டாலரில் வர்த்தகமாகியது. அதற்குபின் இன்றுவரை பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே காணப்பட்டது. இதற்கிடையில் மார்ச் 23-ம் தேதி ஒரு வாரத்தின் அதிக அளவாக பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் 121.60 டாலரில் வர்த்தகமாகியது.
இப்படியான சூழலில் கடந்த 8 நாட்களில் 7 முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 54 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் 57 காசுகளும் இன்றும் விலை அதிகரித்துள்ளது. இதேவேளையில், பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் சுமார் 13 டாலர் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சாவின் விலையை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தே காணப்படுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் உயர்வால், போக்குவரத்து செலவு அதிகரித்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வணிகர்களும் பொதுமக்களும் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், விலை உயர்வின் பின்னணி ஏனென்பது கேள்விக்குட்பட்டே இருக்கிறது.