பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ மூலம் 16,600 கோடி ரூபாய் திரட்ட பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். ரூ.12,000 கோடி புதிய பங்குகளாகவும், சுமார் 4600 கோடி ரூபாய்க்கு ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கவும் தயாராகவும் இருக்கிறார்கள். நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 12-ம் தேதி நடந்தது. அதில் இதற்கான அனுமதி கிடைத்தது. இந்த வாரத்தில் ஐபிஓக்கு அனுமதி வேண்டி செபியிடம் விண்ணப்பிக்க இருப்பதாகவும், வரும் நவம்பரில் ஐபிஓ வெளியாக இருப்பதாகவும் தெரிகிறது.
ஐபிஓவுக்கு பிறகு நிறுவனர் என்னும் அஸ்தஸ்தை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா இழக்க இருக்கிறார். செபி விதிமுறைகளின்படி ஒரு நிறுவனத்தின் ஐபிஓ வெளியான பிறகு நிறுவனர் வசம் 20 சதவீத பங்குகள் இருக்க வேண்டும். ஆனால், ஐபிஓவுக்கு பிறகு விஜய் சேகர் சர்மா வசம் 14.61 சதவித பங்குகள் மட்டுமே இருக்கும். நிறுவனராக அறியப்படாவிட்டாலும், தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் சேகர் சர்மா இருப்பார்.
தற்போது நிறுவனத்தின் வசம் 1000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், வென்ச்சர் கேபிடல் நிறுவனர்கள், பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள் என பலரிடமும் பேடிஎம் பங்குகள் உள்ளன.
அலிபாபா குழுமத்தை சேர்ந்த ஆண்ட் பைனான்ஸியல் வசம் 38 சதவீத பங்குகளும் சாப்ட்பேங்க் வசம் 18 சதவீத பங்குகளும் உள்ளன. மேலும், எலிவேஷன் கேபிடல் 17.65 சதவீத பங்குகள் உள்ளன. சமீபத்தில் பேடிஎம் நிறுவனத்தின் இயக்குநர் குழு மாற்றம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
கோல் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் பவருக்கு பிறகு மூன்றாம் பெரிய ஐபிஓவாக பேடிஎம் இருக்கும்.