ஒரு வணிகனின் கதை 9 | தொழிலில் சொல்லின் முக்கியத்துவம் என்ன?

ஒரு வணிகனின் கதையின் 9வது அத்தியாயமான இதில், தொழிலில் பேசும் சொற்கள் எவ்வளவு நம்பிக்கையினை உண்டாக்கும் என்பதை பார்க்கலாம்
ஒரு வணிகனின் கதை 9
ஒரு வணிகனின் கதை 9 முகநூல்
Published on

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதைபுதிய தலைமுறை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!


தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 9 - சொல் (பகுதி 1)

ஒரு பெரிய சைஸ் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடைக்குள் வந்தார். அவரது தோரணையிலேயே தெரிந்தது, நிச்சயம் ஏதாவது அரசு அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது பணக்காரராக!

“வாங்க சார்!”

“வணக்கம் தம்பி, அக்ரிகல்ச்சர் டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். இங்கதான், பக்கத்துல, பொண்ணுக்காக ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். முடியப்போகுது. அதான் டைல்ஸ் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”

“பண்ணிடலாம் சார், உள்ள வாங்க!”

“வீட்ல எல்லோரும் திருநெல்வேலி போலாம்னு சொன்னாங்க, நான்தான் உள்ளூர்ல பாப்போம். நம்மளை நம்பிதான கடை வைச்சிருக்காங்க, நாமளே சப்போர்ட் பண்ணலைன்னா எப்படினு சொல்லிட்டு வந்தேன். அப்பத்தானே நம்மூரும் வளரும்?”

“சரியா சொன்னீங்க சார். உங்களை மாதிரிலாம் யார் சார் நினைக்குறா? நூறு, இருநூறு சதுரடிக்கெல்லாம் சிட்டிக்கு ஓடிர்றாங்க!”

சிரித்தபடி சொன்னேன்.

“என்ன சிட்டியிலிருந்து இங்க ஒண்ணு, ரெண்டு ரூவா அதிகமா இருக்குமா? எவனுக்கோ கொடுக்குறதுக்கு உள்ளூர்க்காரங்க சாப்பிட்டுட்டு போகட்டுமே!”

“என்ன சார் அப்படிச் சொல்லிட்டீங்க? சிட்டியை விட ரெண்டு ரூபா நம்மகிட்ட கம்மியா இருக்கும் சார்!”

“என்ன தம்பி சொல்றீங்க?”

“ஆமா சார், போட்டி அப்படி இருக்கு. சிட்டியை விட சதுரடிக்கு ரெண்டு ரூபா எல்லா ஐட்டத்திலயும் கம்மியாதான் வைச்சிருக்கேன். அதோட உங்களுக்கு வண்டிச் செலவு மிச்சம். கொஞ்சம் கூட குறைச்சு வாங்கிட்டாலும் பிரச்சினையில்ல. ரெண்டு பாக்ஸ் குறையுதுன்னாலும், திரும்ப சிட்டிக்கு ஓட வேண்டாம். இங்க பக்கத்துலயே பைக்ல வந்து எடுத்துக்கலாம். ரெண்டு பாக்ஸ் அதிகமாயிட்டாலும் குடுத்த விலைக்கே ரிட்டர்ன் எடுத்துக்குவேன்.”

“அடேங்கப்பா, பரவாயில்லயே தம்பி, அப்படினா ஏன் எல்லோரும் அங்க ஓடுறாங்கன்றீங்க?”

“என்ன இருந்தாலும், கூட நாலு வெரைட்டி பாக்கலாம்ல சார். நம்மகிட்ட நாலைஞ்சு வெரைட்டி இருக்கும். அங்கன்னா பத்து பதினைஞ்சு இருக்கும். அது ஒண்ணுதான் வித்தியாசம். நாம நம்ம மார்க்கெட்டுக்கு தக்கனதானே சார் வைக்க முடியும்”

“ஆமாமா, சரிதான். அதோட டிசைன்ல என்ன கிடக்கு? ஒட்டுற வரைக்கும்தான் டிசைனு, கலர்னு பாத்து பாத்து வாங்குவாங்க. ஒட்டி நாலு நாளாச்சுன்னா டைல்ஸை யாரு பார்க்கப்போறா? என்னா டிசைன்னாலும் பழகிடும்! நமக்குத் தேவை நல்ல தரமா இருக்கணும். அவ்வளவுதான்!”

அவருடைய புரிதலைப் பார்த்து எனக்கு லேசாக கண்ணு கலங்கியது. வரக்கூடிய ஒவ்வொரு கஸ்டமருமே இப்படி இருந்துவிட்டால் எப்படி இருக்கும்? லாபம் வருதோ இல்லையோ, நிம்மதியாகத் தொழில் பண்ணலாமே!

ஒரு வணிகனின் கதை 9
ஒரு வணிகனின் கதை 8 | நினைக்காத நேரத்தில் கிடைக்கும் நம்பிக்கை உணர்வும் ஒரு அற்புதம்தானே?

“ரொம்பக் கரெக்டா சொன்னீங்க சார்!”

பிறகு அதென்னது, இதென்னது என்று ஒரு பத்து நிமிடம் எல்லா டைல்ஸ்களையும் பார்வையிட்டுவிட்டு,

“சரி தம்பி, மொத்தம் எவ்வளவு ஆவுதுனு கொட்டேசன் கொடுங்க! இந்த வாரம் எடுத்துடுவோம்”

“வாங்க சார், வந்து உக்காருங்க! எழுதித் தர்றேன்!”

அமர்ந்தார். அமர்ந்தேன்.

“முதல்ல டீ சொல்லட்டுமா சார்?”

“இல்ல தம்பி, வெளியே டீ, காபிலாம் சாப்பிடுறதில்ல!”

“ரொம்ப நல்ல பழக்கம் சார். எனக்கு நாப்பத்தஞ்சு வயசுதான் ஆகுது. ப்ரீ டயபாட்டிக்னா பாத்துக்குங்களேன். நம்மூர் கடைகள்லலாம் சுகர் அதிகமா போட்டுர்றாங்க!”

“கரெக்டா சொன்னீங்க!”

“சரி, சொல்லுங்க சார்!”

“சுகருக்கு என்ன பண்ணனும்னா, காலைல அஞ்சரைக்கு எழுந்திருச்சு, பொன்னாங்கண்ணி கீரையை கொஞ்சம் எடுத்து, அதுல கொஞ்சம் உப்பு, மஞ்சள், மிளகு, சீரகம் இதெல்லாம் தட்டிப்போட்டு, மிக்சியில போட்டு அரைச்சி, ரெண்டு சின்ன வெங்காயம் சேத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, தண்ணி சேர்த்து நல்லா பாதியா கொதிக்க விட்டீங்கனு வைங்க… நல்லா கீரை சூப் கிடைக்கும், அதை வெறும் வயித்துல குடிச்சிட்டு நாலே நாலு கிலோமீட்டர் நடந்தீங்கனு வைங்க…?”

என்று இழுத்தார். இத்தனையும் செஞ்சு முடிக்கவே ஏழு மணியாயிடும், அப்பால எங்குட்டு வாக்கிங் போகுறதுனு வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு, சொல்லுங்க என்பது போல பார்த்தேன்.

“இதை ஒரு மூணு மாசம் செஞ்சா போதும். சுகர்லாம் எந்த மூலைக்கு போகும்னு தெரியாது!”

“நிச்சயமா பண்ணிப்பாக்குறேன் சார்!”

இப்படி ஒரு நல்ல கஸ்டமரைப் பார்ப்பதே அரிது. அதிலும் அக்கறையோடு அவர் சொல்லும் டிப்ஸை கேட்காமலிருந்தால் நன்றாகவா இருக்கும்?

“சரி சார், அளவு சொல்லுங்க!”

“நோட் பண்ணிக்குங்க”

என்றபடி ஒரு பேப்பரை பையிலிருந்து எடுத்தார்.

ஒரு வணிகனின் கதை 9
ஒரு வணிகனின் கதை 6 | ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வது சரி? கடினமாகவா, மென்மையாகவோ?

“ஹாலு ஒரு 320 சதுரடி. ரெண்டு பெட்ரூமு சேர்த்து 260 சதுரடி. ஒரு கிச்சன் 140 சதுரடி. ஸ்டோர் ரூம் மாதிரி இன்னொரு ரூம் இருக்கு, அது ஒரு 120 சதுரடி இருக்கும். அப்புறம் மாடி. மாடியில ஒரு ஹாலும், ஒரு பெட்ரூமும் தான் இருக்கு. பெட்ரூம் ஒரு 140 சதுரடி இருக்கும். ஹால் 180 சதுரடி இருக்கும். அப்பறம்…”

ஆஹா, லக்கி பிரைஸ் போன்ற கஸ்டமர். இப்போவே 1000 சதுரடி தாண்டுது. இன்னும் ரெண்டு மூணு பாத்ரூம், முன்முகப்பு போன்றவற்றையெல்லாம் சேர்த்தால் 1500க்குக் குறையாது. 60 அல்லது 70 ஆயிரம் பிசினஸ். உள்ளுக்குள் எழுந்த குதூகலிப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக எழுதியபடி,

”கீழைக்கும் மேலைக்கும் வித்தியாசம் இருக்கே சார்!”

“ஆமாமா, பாதிக்குதான் போட்டிருக்கு. மிச்ச ஏரியா ஓபனா மொட்டை மாடி மாதிரி இருக்கும், இல்லைனா பெரிய பால்கனி மாதிரினு வைச்சுக்குங்களேன். அங்க டைல்ஸ் வேண்டாம். டிரடிஷனல் தளக்கல் போடலாம்னு இருக்கேன்”

“போடலாம் சார், நல்லாருக்கும்!”

“நம்மகிட்ட இருக்கா?”

“தளக்கல் இப்பத்திக்கு நம்மகிட்ட இல்ல, நிறைய கம்ப்ளைண்ட் வருது. நீங்க வெளிய எடுத்தாலும் பாத்து எடுங்க சார்.”

”அப்படியா தம்பி, என்ன கம்ப்ளைண்ட்?”

நம்மிடம் எடுக்காவிட்டாலும், ஒரு கஸ்டமருக்குத் தேவையான தகவல்களைச் சொல்வது நம் கடமையல்லவா?

ஒரு வணிகனின் கதை 9
ஒரு வணிகனின் கதை 5 | மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற நபரை எப்படி கையாள்வது?

“ஹீட்ல தூக்கிருது சார். அப்புறம் எல்லாத்தையும் உடைச்சு எடுத்துட்டு வேற போடணும். இருந்தாலும், பயப்பட வேண்டாம் சார். பாவூர்சத்திரம் கணேசன் மாதிரி நல்ல இடத்துல வாங்குனா பிரச்சினை இருக்காது. என்ன ஒண்ணு, உடனே கிடைக்காது, காத்துக்கிடக்கணும். பூராம் அட்வான்ஸ் புக்கிங்ல போய்கிட்டிருக்கும்.”

“அதெல்லாம் வாங்கிரலாம் தம்பி, நம்மளையே காக்க வைச்சிருவானா அவன்?”

“சரி சார், மத்தது சொல்லுங்க சார்?”

நினைத்தபடியே கீழே சமையலறை சுவர், இரண்டு குளியலறை, கழிப்பறை மேல ஒரு கழிப்பறை இணைந்த குளியலறை, முன்முகப்பு டைல்ஸ் என 1500 சதுரடியைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. கூடுதலாக,

“வீட்டுக்குள்ளேயும் செவுத்துல பெயிண்டுக்குப் பதிலா டைல்ஸ் போட்டுரலாம்னு பார்க்குறேன் தம்பி, ஒண்ணு ரெண்டு வீடுகள்ல பாத்தேன். நல்லாருந்தது. கழுத பெயிண்டடிக்கிற வேலையில்லை. பத்திருபது வருசத்துக்கு பிரச்சினை இல்லாம நீட்டா இருக்கும்”

“சரியா சொன்னீங்க சார், பண்ணிடலாம் சார். அளவு சொல்லுங்க!”

“அதான் எடுக்கல. அது சுவர்ல ஜன்னல், கப்போர்ட், அந்த ஸ்டோர் ரூம் பக்கத்துல சுவர் வேற மாதிரி இருக்கு. அதான் குழப்பமா இருந்தது. டைல்ஸ் ஒட்டுறவன் நாளைக்கு வர்றேனு சொல்லியிருக்கான். அவன் வந்து அளந்து சொன்னப்புறம்தான் தெரியும்!”

”அப்ப, அதைக் கடைசியா பாத்துக்கலாம் சார்.”

“இல்ல, தம்பி! அதையும் சேர்த்துதான் எடுக்கணும். வண்டி செலவு ஒரே செலவா போயிடும்ல! இந்த டைல்ஸ் ஒட்டுறப் பசங்க வர்றேனு நாலு நாளா ஏமாத்திகிட்டு இருக்கானுக, ஒண்ணு பண்ணுங்க, இப்ப என் கூட வந்துடுங்க, போயி அளந்து பாத்துட்டு வந்துடுவோம். என்ன சொல்றீங்க? உங்களுக்கு அளக்கத் தெரியும்ல”

“தெரியும் சார், ஆனா பொதுவா கஸ்டமர் பிளேஸுக்கு வர்றதில்லை!”

“ஏன் அதுனால என்ன?”

“பெருசா ஒண்ணுமில்ல, சரி சார், வர்றேன்!”

யோசித்தபடி எழுந்தேன்.

இந்தப் பகுதி இன்னும் முடியவில்லை. அடுத்த அத்தியாயத்திலும் தொடர்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com