ஒரு வணிகனின் கதை 7 | ‘லோன் வேணுமா? உங்களுக்குதான் இந்த செய்தி!’

“சார், ஒரு வருஷம்தான் ஆச்சு, குறைஞ்சது ரெண்டு வருஷம் ட்ரான்ஸாக்சன் காமிச்சாத்தான் ஃபர்தரா லோனைப் பற்றிப் பேச முடியும்!” ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொண்டார்.
home loan
home loanfile image
Published on

முன்குறிப்பு:

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

இனி ஏழாவது அத்தியாத்தை பார்ப்போம்

அத்தியாயம் 7 - நண்பன்

கண்ணனிடமிருந்து போன் வந்தது. எடுத்தேன்.

“சொல்லுடா, எப்படியிருக்கே? பேசி ரொம்ப நாளாச்சு”

“நீ சொல்லுடா தொழிலதிபர். நாட்டுல கொசுபத்தி விக்கிறவன், குண்டூசி விக்கிறவன்லாம் தொழிலதிபர்ங்கிறானுக”

“அது சரி, வேலைல்லாம் எப்படி போயிகிட்டிருக்கு?”

“அதெல்லாம் நல்லா போகுது, உன் ஆர்டிகிள்ஸ்லாம் புதிய தலைமுறை இணையத்துல பார்த்தேன். ரொம்ப நல்லா போயிகிட்டிருக்கு. காமெடில்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! ஆனா, என்ன புதுசா தொழில் பண்றவனை, தொழில் பண்ணலாம்னு நினைச்சிகிட்டிருக்கிறவனை எல்லாம் பயமுறுத்துறதுனு கங்கணம் கட்டிகிட்டுதான் இதுல இறங்கியிருக்கிறியா என்ன?”

“சேச்சே, இல்லடா! இந்தத் தொடரை எழுதறதுக்குக் காரணமே, ஒரு சின்ன சைஸ் தொழில், வியாபாரம் இதெல்லாம் பண்றவங்க, அல்லது பண்ணலாம்னு ஆசைப்படுறவங்க எல்லோரும், என்னென்ன விஷயங்களையெல்லாம் செக்லிஸ்ட் மாதிரி போட்டு வைச்சிகிட்டு அதில் நாம எதில் சரியா இருக்கோம், எதில் சரியில்லை, எதை திருத்திக்கணும், எதை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு தெரிஞ்சிக்கிறதுக்கு நம்மால் ஆன உதவியைப் பண்ணனும்க்கிறதுதான்.

இதுல டெக்னிகல்ஸ், ஆபரேஷன், மைண்ட் செட், பைனான்ஸ் என எல்லா ஏரியாவயும் முடிஞ்ச அளவுக்கு கவர் பண்ணலாம்னு இருக்கேன். ஆனா, பிளானிங், பர்ச்சேஸிங், மார்க்கெட் ஸ்டடி அது இதுனு அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சதையே, ஆன்லைன் கிளாஸ் மாதிரி மொக்கை போடுறதை விட இதையெல்லாம் நம்ம அனுபவத்திலிருந்தே ஒரு ஜாலியா பகிரலாமேனுதான் இப்படி தொடங்கியிருக்கேன். இதில பல பாஸிடிவான விஷயங்களும் அடுத்தடுத்து வரும்”

home loan
ஒரு வணிகனின் கதை 1 | குறுந்தொழில் முனைவோரிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன..?

”அப்ப, சரி! கீப் கோயிங்! டு வெல்”

“தேங்ஸ்டா!”

”வைச்சிறவா?”

“டேய், இரு இரு. கொஞ்ச நாளைக்கு முன்னால கேட்டிருந்தேனே, கிணத்துல போட்ட கல்லு மாதிரி கிடக்குது. ஒரு பதில் கூட சொல்லல!”

“என்னது?”

“இன்வெஸ்ட்மெண்டுக்கு பணம் கேட்டிருந்தேனே, ஒரு நாலு லட்சம் குடுடா!”

“நாலு லட்சமா? அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போறது?”

“என்னடா இப்படிச் சொல்லுற? ஒரே வருசத்துல ஒன்ஸ் இன் த்ரீ மன்ந்த்ஸ்னு நாலு தவணையா முழுசா திருப்பிக் கொடுத்திடுறேண்டா. எப்படியாச்சும் பண்ணுடா, ப்ளீஸ்!”

“கையில சுத்தமா காசே கிடையாதுடா. போன மாசம்தான் அந்த ஓட்டைக்காரை வித்துட்டு புதுக் காரை எடுத்தேன். முழுசா 10 லட்சம் எக்ஸஸா போச்சு. கைல 6 லட்சம்தான் இருந்துச்சு. மிச்சத்துக்கு பொண்டாட்டி நகையை பேங்குல வைச்சிதான் எடுத்தேன். வீட்டு ஈஎம்ஐ, ம்யூச்சுவல் ஃபண்ட், கோல்டு ஸ்கீம்னு ஒரு பைசா சம்பளத்துல கைல நிக்கிறதில்ல. கைச்செலவுக்கே அவகிட்டதான் வாங்கிட்டுப் போறேன்னா பாத்துக்கயேன்.”

அவன் எத்தனையாவது வீட்டுக்கு இப்போது ஈஎம்ஐ கட்டிக்கொண்டிருக்கிறான், எத்தனை கிலோ கோல்டு ஸ்கீமில் பணம் போட்டுக்கொண்டிருக்கிறான், ம்யூச்சுவல் ஃபண்டில் எத்தனை லட்சம் கிடக்கிறது, இப்போது அவன் வாங்கிய காரின் விலை என்ன, நான்கு லட்சத்துக்கு அடகு வைத்த மனைவியின் நகைகள் போக அவளிடம் எவ்வளவு நகைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இவன்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக என் உயிருக்குயிரான நண்பன்!

“சரி வைச்சித் தொலை!”

home loan
home loan

“இல்லடா, பேங்க் லோன் போக வேண்டியதுதானே, செண்ட்ரல் கவர்மெண்ட் புதுசா தொழில் பண்றவங்களுக்குனு எவ்வளவு விதவிதமா லோன்ஸ் குடுக்குறாங்க தெரியுமா? நிறைய மானியம் வேற இருக்கும்! உனக்கென்ன, நாலு வருசமா தொழில் பண்ற? உன் ட்ரான்ஸாக்‌ஷனை காமிச்சாலே போதுமே? உடனே அப்ரூவ் பண்ணிருவாங்களே!”

“செருப்பு பிய்ஞ்சிடும்! ஒண்ணு முடிஞ்சா உதவி பண்ணு, இல்லைனா மூடிகிட்டு போயிடு! இந்த அட்வைஸ் மூட்டைகளைத் தூக்கிகிட்டு மட்டும் வராத! வைடா போனை!”

home loan
ஒரு வணிகனின் கதை 3 | எல்லோரையுமே சந்தேகிக்கத்தான் வேண்டுமா?

கண்ணன் மட்டுமல்ல, இந்த விஷயத்தை இந்த நான்கு வருடங்களில் பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். தொழிலுக்கான பேங்க் லோன், அதன் மீதான மானியம் அது இது என்று கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிடுவார்கள்.

கடைக்கு அருகிலேயே இருந்தது ஒரு தேசிய வங்கி. உள்ளூர் கடைக்காரர்கள் பலருக்கும் அதில் கணக்கு இருந்தது. நானும் அதில்தான் கடையின் நடப்புக் கணக்கை வைத்திருந்தேன். எடுத்த எடுப்பிலேயே கடன் என்று போய் நிற்கக்கூடாது என்று சுமார் ஒரு வருடம் கழித்து, எனது வரவு செலவுக் கணக்குகள், தணிக்கை அறிக்கை, ஸ்டாக் ரிப்போர்ட் என இருந்த தாள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வங்கி மேலாளரைப் பார்க்கப்போனேன்.

எனது கையில் இருக்கும் ஃபைலைப் பார்த்துவிட்டாரோ என்னவோ, ’இன்று வேலை இருக்கிறது, நாளை வாருங்கள்’, ’இரண்டு நாட்கள் வேலையாக மேலிடத்து மீட்டிங்குக்கு செல்கிறேன், அடுத்த வாரம் வாருங்கள்’, ‘காய்ச்சலாக இருக்கிறது, கொரோனாவாக இருக்கலாம், ஒரு வாரம் யாரையும் பார்ப்பதில்லை’ இப்படிப் பல காரணங்களைச் சொல்லி என்னை விரட்டியடித்துவிட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் வேறு வழியில்லாமல் என்னை உட்கார வைத்து ஃபைலை வாங்கிப் பார்த்தார். பார்த்தார் என்றால், உள்ளிருக்கும் விஷயங்களை அல்ல, ஃபைலைக் கண்ணால் பார்த்தார்.

home loan
ஒரு வணிகனின் கதை 5 | மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற நபரை எப்படி கையாள்வது?

“சார், ஒரு வருஷம்தான் ஆச்சு, குறைஞ்சது ரெண்டு வருஷம் ட்ரான்ஸாக்சன் காமிச்சாத்தான் ஃபர்தரா லோனைப் பற்றிப் பேச முடியும்!” ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொண்டார். இந்த ஒரு வாக்கியப் பதிலை முதல் நாளே சொல்லியிருந்தால், இத்தனை நாட்கள் அலைச்சலாவது மிஞ்சியிருக்கும்.

அடுத்து வந்த ஒரு வருடத்தில் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி முதலீடு செய்து இயன்றளவு விற்பனையை, ஸ்டாக்கைப் பெருக்கியிருந்தேன். முதலாம் ஆண்டுக்கும், இரண்டாம் ஆண்டுக்கும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பித்திருந்தேன். இப்போது அவரால் மறுக்க முடியாது. நாம் கேட்கும் தொகையும் சிறிதுதான். நிச்சயம் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கை! ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப்போனது.

bank
bankfile image

“எல்லாம் சரிதான் சார், இப்போதைக்கு ஸோனல் லெவல்ல இந்த மாதிரி தொழில் கடன் கொடுக்கக்கூடாதுனு நிறுத்தி வைச்சிருக்காங்க, நான் என்ன பண்றது?”

“ஏன் சார் நிறுத்தியிருக்காங்க? நான் இந்தந்த ஒன்றிய அரசுத் திட்டங்களுக்குக் கீழேதானே கேட்கிறேன்…”

“அதெல்லாம் என்னைக் கேட்டா, நான் என்னத்தைச் சொல்றது சார்?”

home loan
ஒரு வணிகனின் கதை 6 | ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வது சரி? கடினமாகவா, மென்மையாகவோ?

“அஃபிஷியலா நிறுத்தியிருக்காங்களா சார்?”

பார்த்தால் படித்த ஆளாகத் தெரிகிறது. ஸோனல் ஆஃபீசுக்குப் போனாலும் போய் நிற்பான். எங்காவது எழுதிப் போட்டாலும் போடுவான் எனும் யோசனை அவர் முகத்தில் தெரிந்தது. எதையாவது உளறிவிடக்கூடாது எனும் கவனத்தோடு,

“ஓரலாத்தான் சொல்லியிருக்காங்க!”

“எப்ப சார் மீண்டும் கொடுப்பாங்க?”

“எனக்கெப்படி தெரியும்? நீங்க வேணா ஸோனல் ஆஃபீஸ் போய்ப் பாருங்களேன்!”

சொல்லிவிட்டு, இடத்தைக் காலி செய்கிறாயா என்றபடி அவரது கம்ப்யூட்டரில் கவனத்தைச் செலுத்தினார்.

“சரி சார், அடமானக் கடனாவது கொடுப்பீங்களா சார்?”

“அதை முதலிலேயே சொல்லக்கூடாதா? வீடு இருக்கா?”

“விளைநிலம் கொஞ்சம், வீட்டுமனை கொஞ்சம் கிடக்குது…”

”நோ நோ, காலியிடத்துக்குலாம் நம்ம பேங்க்ல லோன் கிடையாது. ஏதாவது பில்டிங் இருந்தா சொல்லுங்க”

“பில்டிங்கா? அம்மா இருக்காங்க, அவங்க பேர்ல ஒரு வீடு இருக்குது, கொஞ்சம் சின்னதா இருக்கும். பரவால்லியா?”

“எப்ப கட்டின வீடு?”

“1985ல அப்பா கட்டினது”

“85ஆ? வேல்யூ இருக்காது, வாய்ப்பு ரொம்ப கம்மி. 90க்கு அப்புறம் கட்டினது ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க!”

புதிதாக ஒரு பங்களா கட்டிவிட்டு வந்து உங்களிடம் லோன் கேட்கிறேன். அது வரை பொறுங்கள் என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டு, “நன்றி” என்று ஒரு வார்த்தையை சட்டெனச் சொல்லிவிட்டு எழுந்து வெளியேறினேன். கடைக்கு வந்து, எரிச்சலில் ஃபைலை மேசை மீது தூக்கியடித்துவிட்டு உட்கார்ந்தேன்.

பின்னொரு நாளில், ஒரு கல்யாண நிகழ்ச்சியில் மாமா ஒருவர் இன்னொரு வங்கி மேலாளரை சொந்தக்காரர் எனும் வகையில் அறிமுகப்படுத்திவைக்கவும், அவரிடம் இந்த வங்கி அனுபவத்தைச் சொல்லி சில சந்தேகங்களைக் கேட்டேன். அவர் சிரித்தபடியே சொன்னார்,

home loan
ஒரு வணிகனின் கதை 4 | நெட் பிராஃபிட்ட பாக்கனுமா? சேல் பிராஃபிட்ட பாக்கனுமா?

“உங்கள் வங்கி மேலாளர் சொன்னதெல்லாம் ஒரு வகையில் சரிதான். ஐம்பதாயிரத்துக்குக் கீழாக கடனுதவி கேட்கும் சிறிய பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் போன்றவற்றுக்கு பெரும்பாலும் கடன் வழங்கப்படுகிறது. உங்களைப் போன்ற 5 லட்சத்துக்கு மேல் கடனுதவி தேவைப்படும் தொழில்களுக்கும் கடன் வழங்கச் சில ஒன்றியத் திட்டங்கள் உள்ளனதான். எந்த ஸோனல் அனுமதியும் இல்லாமல், அந்தந்த வங்கி மேலாளரே உங்களுக்கு கடன் வழங்க முடியும். ஆனால், செய்யமாட்டார்கள். ஏனெனில், அதற்கும் நம் மக்கள்தான் காரணம்.

நமது ஒவ்வொரு வங்கிக் கிளையும், அதனதன் வரம்புக்குள் இப்படித் தொழில்களுக்கான கடன்களை வழங்கி அவை திருப்பிக் கட்டப்படாமல் பெரும்பாலும் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஏய்க்கப்படுகின்றன. தொழில்கடன், வீட்டுக்கடன், மாட்டுக்கடன் இப்படிப் பல வகைகளில், ஒவ்வொரு வங்கிக்கும் வாராக்கடன் தொகை பல கோடிகளில் இருக்கும், இதன் காரணமாகவே ஒவ்வொரு வங்கி மேலாளருக்கும் மேலிடத்து அழுத்தமும், பணிச்சுமையும் அதிகம்! ஆகவே, உங்களைப் போன்ற புதிய நபர்கள், நல்லதாகவே ப்ரொபோசல்களைக் கொடுத்தாலும் கூட அதை நிராகரிக்கவே பார்ப்பார்கள்.

home loan
home loanfile image

இதுதான் கள நிலவரம். ஒரு சிலர் நகை, சொத்துக்களுக்கு நிகராக மார்ட்கேஜ் லோன்களை, தொழிற்கடனாகக் கொடுப்பதும் உண்டு. பில்டிங் இல்லாமல், காலிமனைக்கு மார்ட்கேஜ் தருவதற்கு நான் சொல்லும் ஒரு வங்கியை அணுகுங்கள்”

என்று சொல்லி இன்னொரு வங்கிக்கு என்னை சிபாரிசு செய்தார். அங்கு சென்று கணக்குத் தொடங்கி, எனது காலியிடத்தை அடமானமாகத் தந்து கடன் பெற்றுவிட்டேன்தான்…

*

ஆனால், அதைப் பெறுவதற்குள் எனக்கு எப்படி நாக்குத் தள்ளிப்போனது என்பதைத் தனி அத்தியாயமாகத்தான் எழுத வேண்டும். உங்களுக்கு இப்படியான லோன் பெறுவது குறித்த வங்கி அனுபவங்கள் உண்டா? குறிப்பாக தொழில் குறித்த மாநில, ஒன்றிய அரசுத் திட்டங்களின் கீழ் கடன்களைப் பெற்றிருக்கிறீர்களா? பதில் தாருங்கள். உதவாத நண்பனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? ஆனால், அதே நேரம் எதிர்பாராத உதவிகள் எந்தத் திசையிலிருந்தும் நமக்குக் கிடைக்கலாம். அது பற்றிய அனுபவத்தை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com