இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!
தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்.
நேற்றும், இன்றும் ஒரு விற்பனை கூட ஆகவில்லை. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல தொழில்னா எல்லாம் இருக்கிறதுதானே!
அடுத்த நாளும் ஒன்றுமில்லை!
நான்காம் நாளும் இல்லை, லேசாக உள்ளுக்குள் உதறியது.
கொரோனா பரவலின் போது, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஊர், உலகமே முடங்கிப் போனது. அப்படி ஒரு நிலைமையை எந்த வியாபாரியும் கற்பனை கூட செய்து பார்த்திருக்கமாட்டான். மருந்துக் கடைகள், காய்கறிக் கடைகள், பால் வியாபாரம் போன்ற மிகச்சில தொழில்கள் மட்டும் இடைவிடாது நடந்துகொண்டிருந்தன.
மனிதன் உயிர்வாழ அத்தியாவசியமான தொழில்களுக்கு மட்டுமே அனுமதி! அந்தச் சூழலே வியப்பாக இருந்தது. அப்படியானால், நாம் செய்துகொண்டிருக்கும் தொழிலானது மனிதர்களுக்கு அத்தியாவசியமில்லாத ஒன்றாகிவிட்டதா என்ன?
இந்த மிக ஆதாரமானத் தேவைகளுள் ஒன்றில்தான் நமது தொழிலும் வருகிறது. அப்படியும் கூட கொரோனா, அதிலும் பிரதான உணவுக்கு மட்டுமே உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தியது. மற்ற இரண்டும் முடங்கிப் போயின. ஆக, இம்மூன்றைத் தாண்டி பிற தேவைகளை, சேவைகளைத் தரும் தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு, அது எப்பேர்ப்பட்ட ஓர் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும்?
அப்போது தொழில் தொடங்கி, ஓராண்டு கூட முடிந்திருக்காத காலம். மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தேன். எல்லோரையும் போல ஊக்கத்தைக் கைவிடாது மீண்டு எழுந்து வந்தேன்.
இன்றும் அப்படி ஏதாவது கொரோனா, கிரோனா வந்துவிட்டதா என்ன? நான்காம் நாள் மாலை நமது வழக்கான கஸ்டமர்களில் ஓரிருவரை போனில் அழைத்து விசாரித்ததில், மாவட்டத்தின் அனைத்து கல் குவாரிகளும் சட்டச் சிக்கல்களால் மூடப்பட்டிருக்கின்றன எனும் தகவல் கிடைத்தது. கற்களும், ஜல்லியும், செயற்கை மணலும் இல்லாமல் எப்படிக் கட்டுமானம் சாத்தியமாகும்? இதென்ன கூத்து? எப்போது மீண்டும் குவாரிகள் திறக்கப்படும்? இந்த நிலைமை எப்போது சரியாகும்?
கொரோனாவைப் போலல்லாது, இப்போது ஊர், உலகமே மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஜல்லி, செயற்கை மணல் தவிர்த்த இதர கட்டுமானப் பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் மட்டுமே எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். அதோ சரியாகிவிடும், இதோ சரியாகிவிடும் என்று தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வியாபாரச் சங்கங்கள் என்ன செய்கின்றன? சிட்டியில் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இதே நிலைமைதானா? பெரிய கட்டுமான நிறுவனங்களும் செயலற்றுப் போய் நிற்கின்றனவா? அப்படியானால், அரசு இதில் தலையிட்டு விரைவில் சரி செய்துவிடுமல்லவா? நாம் அப்படி ஒன்றும் கவலையில் ஆழ்ந்துபோகத் தேவையிருக்காதல்லவா?
தொடர் விசாரணைகளுக்குப் பிறகு கிடைத்த தகவல்கள் இன்னும் என்னை திடுக்கிடவைத்தன. சிட்டியிலிருக்கும் கடைகளில் கொஞ்சமாக விற்பனைச் சரிவு இருந்தாலும் சமாளிக்கும் அளவுக்கான விற்பனை தொடர்ந்து கொண்டிருந்தது. கட்டுமானப் பெருநிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் வேலையைச் செய்துகொண்டிருந்தன. எப்படி?
அவர்கள் மிக எளிதாக, அருகிலிருக்கும் மாவட்டங்களிலிருந்து ஜல்லியையும், மணலையும் வரவழைத்து வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். வழக்கமாக மாவட்டத்தின் அந்த மூலையிலிருந்தும், இந்த மூலையிலிருந்தும் லாரிகளில் மணலை வரவழைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு, அருகிலிருக்கும் மாவட்டங்களிலிருந்து வரவழைப்பது அப்படி ஒன்றும் பெரிய சிரமமான ஒன்றாகவே இருக்காது என்று புரிந்தது. ஆக, நமக்கு மட்டுமே, நம்மைப் போன்ற சிறிய சந்தைகளிலிருக்கும் ஒருசில கடைகளுக்கு மட்டுமே பாதிப்பு.
எங்கள் சந்தையிலிருக்கும், சிறிய வகை கட்டுமான நிறுவனங்கள் தங்கள் பணியை நிறுத்தியிருந்தன, தனிநபர் கட்டுமானங்கள் நின்றுபோயிருந்தன. அவ்வளவுதான். இப்போது இந்தச் சிறிய சந்தையிலிருக்கும் சிக்கலைப் போக்குவது அரசுக்கு அப்படியொன்றும் தலைபோகிற கவலையாக இருக்காது. அரசு இயந்திரம் எந்த அவசரமுமின்றி அதன் போக்கில் செயல்பட்டே இதைக் களையும். அதுவரை பொறுமைகாப்பது மட்டுமே தீர்வு என்று தெளிவானது. வேண்டுமானால், நமது மனத் திருப்திக்கு வியாபாரிகள் சங்கத்துக்கும், மாவட்ட ஆட்சியாளருக்கும் நிலைமையை விளக்கி மனுக்கொடுக்கலாம். அவ்வளவே நம்மாலால் ஆனது.
எப்படி தனித்துவமான பிரச்னைகள் வருகின்றன? இப்படித்தானே ஒவ்வொரு தொழிலுக்கும் நாம் உணர்ந்துகொள்ள முடியாத அளவிலான தனித்துவமான சிக்கல்கள் ஏற்படக்கூடும்? ஒவ்வொரு தொழிலும், அது சார்ந்த பிற தொழில்களோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன? ஓர் ஆயத்த ஆடை உற்பத்தி, யாரோடெல்லாம், எதனோடெல்லாம் பிணைக்கப்பட்டிருக்கிறது? பருத்தி விவசாயிகளிடம் தொடங்குகிறது, அவர்களுக்கான தேவை.
எங்கோ, எப்படியோ தொடங்கிவிடும் பருத்திச் செடியின் மீதான பூச்சித் தாக்குதல், அந்த விவசாயிகளின் மீதானது மட்டுமல்ல, அந்த தொடர் சங்கிலியில் அடுத்தடுத்து இருக்கும் அத்தனைத் தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீதான மொத்தத் தாக்குதலாகவும் அமையும். எனது கதையில், குவாரி பிரச்சினை ஆரம்பித்து வாரம், வாரங்களாயின. வாரங்கள் மாதமாகின. பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்தேன். பிறிதொரு நாள் குவாரிகள் திறக்கப்பட்டன. நிம்மதிப் பெருமூச்சு கூட விடமுடியவில்லை, கொரோனாவை விடவும் பலமான அடி விழுந்திருந்தது. காயம் பெரிது, இழப்பு பெரிது.
தேவைப்படும்போதெல்லாம் பணத்தை தொழிலுக்குள் போடத் தயாராக இருக்கும் ஒரு அப்பா வேண்டும். இதோ என் நகைகள் எதற்காக இருக்கின்றன, எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனமுவந்து சொல்லும் ஒரு மனைவி வேண்டும். என்ன பெரிய ஒன்றரை மாதம், நாலைந்து மாதமானாலும் நான் இருக்கிறேன், நீ ரிலாக்ஸ்டாக இரு என்று சொல்லித் தோள்கொடுக்க ஓர் சகோதரன் வேண்டும். இந்த மாசம் சமாளிக்க அம்பதாயிரம் போதுமாடா, மேற்கொண்டு வேணும்னா கேளு என்று ஜிபே செய்யும் ஒரு நண்பன் வேண்டும். உங்களுக்கு இருக்கிறார்களா என்று யோசித்துக்கொள்ளுங்கள்.
இன்னொரு வகையில், பணத்தை விடுங்கள்!
நமது இயக்கத்தை, செயல்பாடுகளை அருகிலிருந்து கவனித்துக் கருத்துச் சொல்லவும், ஊக்கப்படுத்தவும், விமர்சிக்கவும், விவாதிக்கவும் ஒருத்தர் வேண்டும்.
மேற்கண்டது போல சில இக்கட்டான சூழ்நிலைகளில், ‘கமான் கேகே, உன்னால் முடியும்!’ என்று ஊக்கப்படுத்தும் ஒருத்தர் வேண்டும்! அப்படி ஒருத்தர் உங்களுக்கு இருக்கிறாரா? கவலைப்படாதீர்கள், எனக்கும், உங்களுக்கும் மட்டுமல்ல, முதல் தலைமுறையாக தொழிலில் இறங்கும் யாருக்குமே அப்படி ஒருத்தர் கிடைக்கமாட்டார். ஆகவே, நாம் தனியாளில்லை! (யாருக்காவது அப்படி ஒருவர் இருந்தால், அவரின் ஒன்பது கிரகங்களும் உச்சத்திலிருக்கின்றன என்று நினைத்துக்கொள்ளுங்கள்!)
எனது அப்பா, வித்தியாசமானவர். படிப்பை, வேலையை என்னிடமே விட்டுவிட்டார். அதுகுறித்து ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்டவரில்லை. மிக முக்கியமான மேநிலைப் பள்ளியாண்டுகளிலேயே காதல் முளைத்து, அந்தக் கனவுகளில் திளைத்து நான் கணக்கில் முட்டை வாங்கிவந்தபோது கூட கண்டுகொள்ளாதவர். நானே எதையோ படித்து, நானே ஏதோ வேலை தேடிக் கொண்டபோதும் எந்தக் கேள்வியும் அவர் எழுப்பியதில்லை.
ஆனால், பின்னாளில்தான், அவர் என் படிப்பின் மீதும், வேலையின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பது புரிந்தது. ஒருவகையில் அவர் அப்படி இருந்தது சரிதான் என்று தோன்றினாலும், இன்னொரு வகையில் அவர் என்னைச் சற்றேனும் கண்டித்து, வழிகாட்டிப் பலகையாக இருந்திருக்கலாமோ என்றும் நான் நினைப்பதுண்டு. வகைதொகையில்லாமல், நான் வேலைகளைத் தேடிக்கொண்டதும், ஒன்றை விடுத்து இன்னொன்றுக்குத் தாவியதையும் கூட அவர் விமர்சித்ததில்லை.
ஒரு தடவை ஒரு எம்மென்ஸியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது எனது அலுவலகத்துக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அதுகுறித்து அவர் பெருமைகொண்டிருந்தார் என்பது பின்னாளில் அம்மா சொல்லித் தெரிந்துகொண்டேன். அப்பேர்ப்பட்ட என் அப்பாவே, நான் தொழில் தொடங்கவிருக்கிறேன் என்றதும் முதலில் மறுப்பைத்தான் தெரிவித்தார். நண்பர்கள் முந்திக்கொண்டு மறுத்தார்கள். சிக்கல்களை விவரித்தனர்.
எனது மனைவியும், சகோதரனும், ‘அச்சச்சோ, இவன் சொன்னால் கேட்டுக்கொள்கிற டைப் இல்லையே’ என்பது போல மௌனம் காத்தார்கள். இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக மிக ஆழ்ந்து சிந்திப்பதாய் நினைத்துக்கொண்டேன், மிகத் தீவிரமாக மார்க்கெட் ஸ்டடி செய்வதாய் நம்பிக்கொண்டேன். FMEA ஆய்வையெல்லாம் மேற்கொண்ட தொழிற்துறை அனுபவத்தில் எது, எங்கே, எப்படி என்று எல்லாவற்றுக்கும் தெளிவாய்த் திட்டமிட்டதாய் எண்ணிக்கொண்டேன்.
ஆனால், இந்தக் கடையைத் தொடங்கி நடத்தி ஓராண்டுக்குப் பின்னர்தான், எனது திட்டமிடலுக்கும், நிஜத்துக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை உணரமுடிந்தது! இலக்குகளை அடைய முடியாததில் இழப்புகளை விடவும், மனப்போராட்டமே மிக அதிகமாக இருந்தது.
எனது எஞ்சினியரிங் பணியின் போது எனது சிறப்பியல்புகளான தொடர்கற்றலும், பிரச்னைகளைத் தீர்க்கும் குணமும், விடாமுயற்சியும் எனக்குப் பெரிதும் கைகொடுத்தன. தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரம், விற்பனை இலக்கு எனும் பெரிய கத்திகளை விடவும், இருக்கைக்கு அடியில் இருக்கும், நுட்பமான அன்றாடச்சிக்கல்கள் எனும் ஊசிகள்தான் அதிக தொந்தரவுகளைக் கொடுத்தன, கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
களத்துக்கு வெளியே இருந்து, உங்கள் வளர்ச்சிகளை உங்கள் அப்பா, அம்மா, சகோதரன், மனைவி, நண்பர்கள் என அத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். உங்கள் வெற்றிகள் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். உங்களை உற்சாகப்படுத்துவார்கள். உங்கள் பிரச்னைகளின் போதும், இழப்புகளின் போதும் உடனிருப்பார்கள், ஆறுதல் தருவார்கள்!
ஆனால்… களத்துக்குள் நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள்!
எந்தத் தொழிலுமே ஒரு மரத்தான் ஓட்டத்துக்கு இணையானதுதான். மரத்தானில் மட்டும் போட்டி என்பது உங்கள் போட்டியாளர்களுடனானது அல்ல, உங்களுடனானது!
புதிதாக ஓடத்தொடங்கியிருக்கும் உங்களது கால்கள் கெஞ்சும், காஃப் தசைகள் உறைந்துபோய் வலியெடுக்கும், இருதயம் வேகத்தில் தடதடக்கும், வியர்த்துக்கொட்டும், தாகம் தொண்டையை வறட்டும், இலக்குத் தெரியாமல் மனம் சோர்ந்துபோகும்…
அங்கே உங்களுக்கு உதவி செய்யவோ, ஊக்கப்படுத்தவோ யாருமே இருக்க மாட்டார்கள். உங்களை நீங்களேதான் நிலை தடுமாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், உற்சாகப் படுத்திக்கொள்ள வேண்டும்! அது மட்டுமே ஒரே வழி! எளிமையாகச் சொல்வதானால், உங்கள் திட்டமிடலில், எதிர்பாராததை எதிர்பாருங்கள்! இறுதியாகச் சொல்வதானால், உங்களுக்கு ஊக்கமாக ஒரே ஒருவன் எப்போதும் உங்களோடிருப்பான் எனில் அது நீங்கள் மட்டும்தான்! வாழ்த்துகள்!
*
இங்கே இத்தொடரை நிறைவு செய்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்! இத்தொடரை எழுத வாய்ப்பளித்த புதியதலைமுறைக்கு எனது நன்றி. இத்தனை வாரங்களாக என்னோடு பயணித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அனைத்து வாசகர்களுக்கும் என் அன்பு! இத்தொடர் குறித்த விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை எனது மின்னஞ்சலுக்கு எழுதலாம்! என்னை எனது முகநூல் பக்கத்தில் தொடரலாம்!
*