ஒரு வணிகனின் கதை 23 | பொறுமை | தொழிலில் வெற்றி காணவேண்டுமா? அப்போது இது முக்கியம்!

தொழிலில் வெற்றி காணவேண்டுமா? எனில் பொறுமை என்பது மிக அவசியம்!
ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதைfreepik
Published on

முன்குறிப்பு:

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 23 - பொறுமை

ஒருமுறை என் தந்தையாரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். காலை எட்டு மணிக்கெல்லாம் போய்விட்டோம். வழக்கமாக 9 மணிக்கு வரக்கூடிய மருத்துவர்தான். 11 மணிக்குள் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம்தான். ஆனால், அன்று அவர் வந்ததோ 1 மணிக்கு. நாங்கள் அவரைப் பார்த்துவிட்டு கிளம்பும்போது மாலை மணி 3.30!

நம் கையில் மட்டும் இந்த ஸ்மார்ட்போன் இல்லையென்றால் நம் நிலைமையை நினைத்துப் பாருங்கள். எங்காவது காத்திருப்பது, கியூவில் நிற்பது என்றால் மிக மிகத் துன்பமாக இருக்கிறது. முந்தின தலைமுறையில், எல்லா விஷயத்துக்கும் காத்துக்கிடந்தே பாதி வாழ்நாள் நேரத்தை கழித்தவர்கள் நம் முன்னோர்கள். சினிமாவுக்குக்கூட ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று கியூவில் காத்துக்கிடக்க வேண்டும்! இன்று யாராவது சினிமா டிக்கெட்டுக்காக காத்திருப்பார்களா? அப்படி ஒரு சினிமாவே தேவையில்லை என்று கிளம்பிவிடுவார்கள். இன்று பல துறைகளிலும் டெக்னாலஜி புகுந்து நமது காத்திருக்கும் நேரத்தைக் குறைத்துவிட்டாலும் மருத்துவமனை போல அரிதான சில இடங்களில் காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அச்சமயங்களில் நம் கையில் ஸ்மார்ட்போன் இல்லாத நிலையை நினைத்துப் பாருங்கள், அப்போதுதான் நாம் நமது பொறுமையை எவ்வளவு தூரம் இழந்திருக்கிறோம் என்பதை உணரமுடியும்.

ஒருமுறை, எனது வாடிக்கையாளர் ஒருவர், அவரது இறந்துபோன தந்தையார் புகைப்படத்தை ஒரு டிஜிட்டல் டைலில் பதித்துத் தர வேண்டியிருந்தார். நானும் அந்தச் சேவையை வழங்கும் மதுரை நிறுவனம் ஒன்றை நம்பி ஆர்டர் எடுத்திருந்தேன். அவர்கள் வழக்கமாக ஒரு வாரத்துக்குள் தந்துவிடுவார்கள். நானும் அந்த நினைப்பில், பத்து நாட்கள் ஆகும் என்று சொல்லியிருந்தேன்.

பத்தாவது நாள் வாடிக்கையாளர் வந்து விசாரித்த போது மன்னிப்புக் கேட்டு மேலும் இரண்டு நாட்கள் கேட்டேன். அதன் பின்னர் நடந்தது வரலாறு.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 22 | கற்கை | தொழிலில் வெற்றி காணவேண்டுமா? எனில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்!

முதலில் மதுரை நிறுவனம், டிசைனர் இல்லை அதனால் தாமதமாகிறது என்றார்கள். அடுத்து இரண்டு நாட்கள் கழித்து கணினி ரிப்பேர் என்றார்கள், அடுத்து பிரிண்டிங் மிஷினில் பிராப்ளம் என்றார்கள். சுமார் 25ஆவது நாளில்தான் தயாராகிவிட்டது என்றார்கள். அப்பாடி! அடுத்த நான்கு நாட்களாகியும் வராததால் போனைப் போட்டேன். தயாரான டைல் ஓரத்தில் சிறிது உடைந்துவிட்டது, மீண்டும் புதிது செய்துகொண்டிருக்கிறோம் என்றார்கள். அடுத்து பேஸ் டைல் ஸ்டாக் இல்லை என்றார்கள். அடுத்து ஓனர் வீட்டில் ஏதோ போலீஸ் கேசாம், நிறுவனம் ஒரு வாரத்துக்குத் திறக்கப்படாது என்றார்கள்.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதைfreepik

ஏதோ பெரிய பிரச்னை, அதைச் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள் என்று 40 நாட்களைக் கடந்த பின்னர்தான் புரிந்தது. வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிகொடுத்து மன்னிப்புக் கேட்டு அந்தக் கஸ்டமரை அனுப்பிவைத்தேன். அவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்ததால், அவரால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. மூன்று வாரத்தைத் தாண்டியதிலிருந்தே என்னிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்.

நான்தான் பொறுப்பு, அதனால் அனைத்தையும் வாங்கிக்கொண்டேன். என்னால் இயன்றவரை அவரைப் பொறுமையாக வைக்க முயற்சித்தும் முடியவில்லை. அவர் என்மீது காண்பித்த கோபத்தை, நான் மதுரைக்காரர்களிடம் காண்பிக்க, அவர்கள் பதிலுக்கு எகிர, இந்த மூவாயிரம் ரூபாய் வியாபாரத்துக்காக சுமார் ஒரு மாதம் எத்தனை ரசாபாசங்கள்! சொல்லப்போனால், தினமும் கடைக்கு வந்ததும் பிற வேலைகளை விட்டுவிட்டு இதற்காகவே ஒரு போன், ஒரு தகவல், ஒரு சமாதானம் என்று மன உளைச்சலாகவே ஆகிவிட்டது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 21: தொழிலில் முடிவெடுத்தல் ஏன் முக்கியம்?

தொழிற்சாலைகளில் விலை-தரம்-நேரம் என்றொரு கோல்டன் டிரையாங்கிள் விதி உண்டு. நம் பொறுப்பில் இருக்கும் விஷயங்களை இதைக் கவனத்தில் கொண்டு முடித்துத் தரலாம். அல்லது மறுக்கலாம்! ஆனால், நம் கையில் இல்லாத இப்படிச் சில விஷயங்கள் நடக்கும் போது என்னதான் செய்வது?

உங்கள் கையில் ஒரு புதிய சட்டை வைத்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் தொழில் நிறுவனமும், அதைப் பற்றி உங்கள் சந்தையிலிருக்கும் மதிப்பும்! அதில் முதல் ஊசி இறங்குவதுதான், முதல் தடவையாக ஒரு வாடிக்கையாளரிடம் கடுமையாக கெட்ட பெயர் வாங்குவது என்பது.

சொல்லப்போனால், நீங்கள் புதிய சட்டை வாங்கி வரும்போதே அதில் ஐந்தாறு குண்டூசிகளைக் கொண்டு குத்திதான் வைத்திருப்பார்கள். போலவே, நீங்கள் நல்ல பெயர் வாங்கியதாய் நினைத்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளரைக்கூட நீங்கள் கடுப்பேற்றியிருக்கலாம். பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்வதில்லை! அவர்களும் ஊசியிறங்கியதைப் போலத்தான்!

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 19 | அனைத்திலும் தொழில் வாய்ப்பைக் கண்டுகொள்ளும் பார்வை!

ஓர் ஊசித் துளை உங்கள் ஆடையை எதுவும் செய்யப்போவதில்லை! அதைப்பற்றி பெரிதாகக் கவலை கொள்ளாமல் உங்களின் அடுத்த உருப்படியான வேலையைப் பார்க்கச் சென்றுவிடுங்கள். அதுதான் நாம் அமைதியாக இருக்கவும், ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஒரே வழி! அதாவது பொறுமை!

நான் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கடை திறந்தபோது, எனது முதல் கஸ்டமர் வர ஒரு வாரமாயிற்று. அவரும் வந்து 70 ரூபாய்க்கு ஒரு திருஷ்டிப் பிள்ளையார் படம் போட்ட ஒற்றை டைலை வாங்கிப்போனார். எனது முதல் மூன்று மாதங்களை எப்படிக் கடந்தேன் என்று இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னால், கடும் பிரயத்தனத்துக்குப் பின்னர் நேரடிக் கொள்முதலுக்கான முதல் ஆர்டரைப் போட்டிருந்தேன்.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 20 | எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம் வேண்டும்! ஏன் தெரியுமா?

நான் நேரடியாக மோர்பி மாவட்டத்துக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து சுமார் 5 உற்பத்தி நிறுவனங்களைச் சந்தித்து ஒரு தொடர்பை உருவாக்கியிருந்தாலும் நான் முதல் ஆர்டரைக் கொடுத்தது அந்த ஐந்து பேரல்லாத, நான் சந்தித்திராத ஒரு புதிய ஏஜெண்டுக்கு! அதற்குப் பல காரணங்கள்.

ஏஜெண்டின் மீதான் நம்பிக்கை, அட்வான்ஸ் செலுத்துதல், டைல்ஸ் தேர்வு செய்தல், டிரான்ஸ்போர்ட்டர் ஏற்பாடு செய்தல் என ஒரு வாரம் பரபரப்பான நிகழ்வுகள். உற்பத்திக்கு 7 நாள், டிரான்ஸ்போர்ட்டுக்கு 7 நாள் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், எனது முதல் கண்டெய்னர் வந்தது நான் ஆர்டர் போட்டு, அட்வான்ஸ் அனுப்பியதிலிருந்து 26வது நாள்தான்! 14ம் நாளிலிருந்து, 26ம் நாள் வரை சுமார் 12 நாட்கள் எனக்கு எப்படியெல்லாம் கழிந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த ஏஜெண்ட் நாம் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிவிட்டிருப்பாரோ? நமது டைல்ஸை ஏற்றிவரும் கப்பல் வழி தவறி நேராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்குமோ?

கொடுக்கப்பட்ட கப்பல் எண்ணை வைத்து ஆன்லைனில், இப்போது அது எங்கு வந்துகொண்டிருக்கிறது என்று அந்தக் கப்பலின் கேப்டனை விட அதிக கவலையுடன் மானிட்டர் செய்துகொண்டிருந்தேன். இடையே, வ.உ.சி எப்படி கப்பலோட்டியிருப்பார் என்ற சிந்தனை வேறு. அந்த 12 நாட்களும் வேறு ஏதும் உருப்படியாக செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்களா என்ன?

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 18 | தொழிலில் என்னென்ன மாதிரியான கேள்விகளெல்லாம் எழக்கூடும்?

நாம் நமது கைகளில் இருக்கும் வேலையை ஒரு ஜீனியைப் போல டக்கென்று செய்து முடித்துவிட்டு அடுத்து என்னவென்று யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எந்த விஷயங்கள் நம் கைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதோ, அந்த விஷயங்களில் பொறுமையாகக் காத்திருக்கத்தான் வேண்டும்.

சில விஷயங்கள் அதனதன் விதிமுறைகளின் படிதான் நடக்கும். உங்கள் கப்பல், வரும் வழியில் கொச்சி துறைமுகத்தில் தொழில்நுட்பக் கோளாறால் மாட்டிக்கொண்டால், காத்திருந்துதானே ஆகவேண்டும். ஒரு டிவிஎஸ் பிப்டியை ரிப்பேர் செய்துதர நமது மெக்கானிக் எத்தனை நாள் எடுத்துக்கொள்கிறார் என்று நினைத்துப் பாருங்கள். அப்படியானால், அத்தாப் பெரிய கப்பலை கவுத்திப்போட்டு ரிப்பேர் பார்க்க எத்தனை நாளாகும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்!

*

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப்பட்ட கஸ்டமர் அதிருப்தி ஆபத்தானதுதான், அதைத் தாண்டிச்செல்ல வேண்டும்தான். அதற்காக எத்தனை ஊசிகள் குத்தினாலும் பரவாயில்லை, போங்கடா போக்கத்த கஸ்டமர்களா என்றும் நீங்கள் இருக்க முடியாது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டால், உங்கள் சட்டையின் அந்த இடம் சேதப்படுவது மட்டுமல்ல, அங்கிருந்து கிளம்பும் கிழிசல் உங்கள் சட்டை மொத்தத்தையும் கைப்பிடித் துணியாக்கித் தூரப்போட்டுவிடும்! மீண்டும் சந்திக்கிறேன்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com